வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை
உனது பெயருக்கு
வண்ணத்துப்பூச்சியென்றொரு அர்த்தமிருப்பது
எவ்வளவு பொருத்தம்
இல்லாவிட்டால்
என் கூந்தலிலும் தோள்களிலும்
உதடுகளிலும் அமர்ந்து பறந்து திரிய
உன்னால் முடிந்திருக்குமா என்ன
உணர்வெங்கும் குந்திச் சிறகடித்துத் திரியும்
சாகசத்தை
வண்ணத்துப்பூச்சியாய் இல்லாது போனால்
எப்படி நிகழ்த்திக் காட்டுவாயெனக்கு
உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது
உள்ளே பாடல்போல மிதக்கின்ற
வண்ணத்துப்பூச்சி
வெளியே பிடித்துவைக்க முடியாத கனா
பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாள்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராகப்
பறந்துகொண்டேயிருக்கிறேன்
வாழ்வின் கனாக்காலம் முழுவதும்
பருவங்கள் மாறிமாறிப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
தம் வண்ணங்களால் உயிரூட்டுகின்றன
நம் அந்தரங்க வெளிகளில்
வானவில் படிந்து உருகிக்கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதிசொட்ட ஒளிந்திருக்கிறேன்
இன்னொரு முறை
மகரந்தச் சொற்களினால் சிலிர்ப்பூட்டும்
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக்காலக் கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்
பகிர்ந்துகொள்ளாத மாலை
சாம்பல் வெள்ளையாய்
மழை மூசாப்பு தொடங்கும்
அந்தியில் விகசிப்பது
என்னைச் சுற்றிக் குளிர் வலையை
விரித்துக்கொண்டேயிருப்பது
உன் உருவம்
வைக்கோற் கட்டுக்களை
அடைத்துக்கொண்ட மாட்டு வண்டிகள்
வரிசையாக
வயல் பாதையில் வருகின்றன
கறிவேப்பிலை பொரிந்த எண்ணெய் மணம் பரவச்
சிணுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியைக் கூட்டுகிறான்
கடலை வியாபாரி
காற்றின் கிழிந்த ஓரங்களைத்
தைத்து முடிப்பதில்
அவசரம் காட்டுகின்றன
ஒரு சோடித் தும்பிகள்
நெருப்பு நிற மாலைக் கதிர்கள்
ஆற்றுநீர் மேற்பரப்பில்
மருதாணியிடுகின்றதா மயக்கத்தை
பதுங்கிவரும் வாடைக் காற்றின்
எதிர்பாராத தொடுதலில்
அதிர்ந்து சிலிர்க்கின்றன மஞ்சள் மலர்கள்
நான் கற்பனை செய்கின்றேன்
இத்தருணங்களில்
உன் இதமான நெருக்கத்தைப்
பருகாது ஆறிய தேநீரிடம்
நாம் பகிர்ந்துகொள்ளாத
இம்மாலைப் பொழுது தோல்வியைத்
தழுவுகின்றது.
வெறித்தபடி இருக்கும் கனவு
வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு
அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment