Saturday, March 12, 2011

கவிதைகள் ந. இரமேஷ்குமார்

தாம்பத்தியம்

வலியை ஏற்படுத்தும்
ஆவேசங்களின் கிரீடங்களைச்
சரிபார்த்து நிறுத்து

அயர்ச்சி, தளர்ச்சிக்குப் பின்
என்னைக் கைமாற்றிவிடுகிறாய்
இரவிடம்

எதிர்விருப்பமறியா
உந்தன் செயல்பாடு உணர்த்திச்செல்லும்
உன்னுடனான என் இருப்பை

இருந்தாலும்
நீ துப்பும் வார்த்தைகளை
ஏற்படுத்தும் எரிச்சலை
கீறிக்கொள்கிறேன்
பிரியங்களின் நகங்களால்

கசங்கிய காகிதத்தைப்
பிரிக்கும் நேர்த்தியென
என்னைக் கையாளும் உனக்காய்
மடியையும் மார்பையும்
வழங்க வாய்ப்பளிக்காமல்
அபகரிப்பது எதனால்

வாழ்வென்பதன் பார்வைகள்
வேறுவேறுதான் நமக்குள்
சரி நான் கண்ணை மூடிக்கொள்கிறேன்
நீ மட்டும் பார்.

No comments: