Sunday, March 13, 2011

மௌனன் கவிதைகள்

மௌனன்
கவிதைகள்

இளம் கவிஞர் அறிமுகம்

இயற்பெயர்: கொளஞ்சிநாதன்
வயது: 28

'பேய்த்திணை' தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் இவை.

தூது இலை காலம்

வலுத்த மழை வந்தால்
நம் வீதி நதியாகும்

பெயரெழுதி எண்ணம் எழுதி
இலைவிடுதூது நிகழ்த்தியிருக்கிறோம்

ஞாபகமிருக்கிறதா
இதுவும் அந்த மழைக்காலம்தான்
தூதுஇலைகள் தளிர்விட்டிருப்பதை
ஒருமுறை பார் என்கிறேன் நான்

இலைகள் சருகாகட்டும்
என்பதாக இருக்கிறதுன் மௌனம்.

சொடுக்கு

விரல்களுக்குத்தான் தெரியும்
அந்த இன்பம்

சிறுவயதில்
தலைகோதியும் கதைசொல்லியும்
வராத தூக்கத்தைச்
சொடுக்கெடுத்து வரவைப்பாள் பாட்டி

கால் நீட்டச் சொல்லி
அம்மா எடுத்த சொடுக்குக்கு அளவில்லை

எருக்கம் பூக்களில்
சொடுக்குப் போட்டி வைத்தால்
செயிப்பேன் நான்

பேனா பிடித்தே மரத்துப்போகும்
விரல்களுக்கு இப்போதெல்லாம்
சொடுக்கெடுப்பதில்லை.

விரலைப் பிடித்து வேறு யாரேனும்
எடுத்துவிட்டால்தான்
சொடுக்கில் சுகம்

ஏக்கம் சொடுக்கெடுக்குமா.

தோழிமார் நிலம்

ஊடல் நிலமெங்கும்
வளவி ஒலி சிதறக்
கொடியிலிருந்து உதிரும் மண்ணில்

நிலத்திற்குரிய தேவதைகளில்
ஒருத்தியாகிய உன் வாசமும்
காடெங்கும் கடலை வாசமும்
நிறைந்திருக்கும்

அந்தி சிவக்கும் வரை
தோழிமார் கதைகளில்
நீயும் கதை சொல்வாய்

உப்பு பூத்த உன் கழுத்து வியர்வை
என் உணர்நீட்சியில் சுவைநீட்சியின்மீது
தாகத்தை ஏவி விடும்
கறுத்த உன்உடம்பு கரிக்கும்

ஆய்ந்து முடித்து
பெண்டுகளோடு நீ சென்ற பிறகு

குறுக்கொடிய நீ
அமர்ந்த இடத்திற்கு வந்து பார்ப்பேன்

எனக்காகவே இனிக்கும் பிஞ்சுகளும்
உரித்துத் தின்ற கடலைத்தொளும்புகளும்
மிஞ்சிக் கிடக்கும்.

கணம்

இருளை அகற்ற
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்
அந்த வெளிச்சத்தில்
ஒரு கவிதை எழுத முடிந்தது என்னால்

காற்றில்லை . . .
மெய் என்னைப் பால்கனிக்கு நகர்த்தியது

எப்போதும் தன் தலையைப்
பால்கனிக்குள் நுழைத்துக்கொண்டிருக்கும்
மாமரத்தின் ஓர் இலையைப் பிடித்து
முகத்தில் தடவினேன்
அனிச்சையாய் அப்படியோர் பொருள் கொடுத்தது
என் கவிதை.

காரணமழை

பிறிதொன்றின்மேல் சாற்றும்போதும்
உணர்வுகள் எல்லாம்
நதியில்படியும் நிலவென்பதாகவே இருக்கின்றன
பட்டாம்பூச்சிகள் விரும்பக்கூடியது
என்றொரு இசைக்குறிப்பை
என்னிடம் தந்தாய்
என் புல்லாங்குழலிலிருந்து
நீ இயற்றிய கவிதை
இசையாய்க் கசிகிறது
முன்பொரு மழைநாளில் அப்படித்தான்
தரையில் விழுந்து சிதறும் மழையில்
குடை பிடித்துக் கொஞ்சம்நனைந்தாய்
சொட்டச்சொட்டத் தூரத்தில் நின்று
நனைந்த என்னைப்பற்றித்
தோழியிடம் சொல்லியிருக்கிறாய்
சாலைகளெங்கும் குடைக்காளான்கள்
பிடித்து வரக்கூடாதா அவன்.

பேய்த்திணை

நிறைய மாற்றத்திற்குப் பிறகு
என்னுள்ளிருந்த இழையவிழ்ந்து
நீ வசிக்கும் நிலமெங்கும்
படர நேரிட்டதே அப்போதுதான்
வந்ததிந்த இச்சை அணுக்களில் இலை
இருந்தும் எனை நீ
குடிநீருக்குக் கையேந்துபவனாகவே
வைத்திருக்கிறாய்
தரம் தாழ்த்தும் உன் பார்வையில்
உயர்குடிக் கர்வம் குறையவேயில்லை
பாதகத்தி
உன் பூப்புக்குக் கட்டக் கீற்றுக்கு ஏறிய
தென்னை மரத்தில்
என்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும்
அன்றைய அவசர மூச்சும்
அன்று தேய்ந்துபோன என்நெஞ்சும்
பதினாறு நாள் உன்ருதுவாடைக்கு
ஏங்கித் திரிந்த பேய்க்காற்று...

சிற்றில் காலம் - 1

ஏதோ ஒரு மழைக்குப்பின்
முதன்முதலாய்
மணல்வீடு கட்டியதாய் ஞாபகம்
காலம் சில
பின்னோக்கிப் புதைகையில்
கால்சட்டைப் பையிலிருந்து
மணல்துகள்கள் உதிர்கின்றன
அத்தனையும்
கால்களால் கட்டிய வீடுகள்
எதிர்வீட்டுத் தோழனிடம்
பாதம் புதைக்கச் சொல்லிக்
கைகளால் நான் தட்டிச்செய்த வீட்டில்
மறுநாள் தேங்கியிருந்த
மழைநீர்
இப்போதும் சில்லிடுகிறது.

பற்றும் தீ . . .

அமர்ந்த பறவையின்
அதிர்வில் உதிர்ந்த
காய்ந்த இலையின்
பச்சைப் பருவம்
கூடுகள் இருந்த
கிளையில் கழிந்தது

m

மரத்தின் சருகும்
மரத்திலமர்ந்த பறவையின் இறகும்
ஒரே நேரத்தில் உதிரக்கண்டால்
எதனுள் சென்று இதயம்படியும்

m

ஒவ்வோர் இலையிலும்
காற்றின் கவிதை இருக்கும்
சருகுகளில் தீ வைத்தால்
இசை பற்றிக் கொள்ளும்.

No comments: