Sunday, March 13, 2011

கவிதைகள் கோகுலக் கண்ணன்

பகலொளியின் ஒலி


முதன் முதலாகத் திறக்கும் புத்தகம்போல
விரியும் இந்தப் பகல்
வேறொரு பகலின் பிரதி அல்ல:

பூங்காவின் மத்தியில்
வெளிறும் நிழல்களை அகற்றித்
தனிமையின் கிண்ணத்தில் நிரம்புகிறது
விகாசம், உத்வேகம், உவப்பு மற்றும்
நிகரற்ற ஒளி

கவிழ்த்த தொப்பியால் முகத்தை மூடிப்
புல்வெளியில் படுத்திருப்பவனின்
கால்களுக்கிடையில்
காற்று அலசும் புற்களைப் போல
துடிக்கும் இந்தப் பகலின் ஒளி
அவன் காதருகில்
பறக்கும் சிறுவண்டின் ரீங்காரம்போல
ஒலிக்கிறது.

நகர்வு

ஒரே இரவில் எல்லாம் மாறிவிட்டது
வீட்டின் அறைகள் இடம் மாறிவிட்டன
நேற்றைய படுக்கையறை இன்றைய சமைலறையாய்
நேற்றைய கூடம் இன்றைய கழிப்பறையாய்

வீட்டிடம் கேட்டேன்
ஏன் இந்த மாற்றம் என
சுவர்கள் கூறின:
ஓஎன் கால்கள் இன்று அறிந்துகொண்டன
நிற்பது ஒரே இடத்தில் அல்ல என்றுஔ

வீட்டுத்தோட்டம் பெருக்கெடுக்கும் ஆற்றின் கரையில் நின்றது
ஆற்றிடம் கேட்டேன்
எப்போது, எங்கிருந்து வந்தாய் என

ஆற்றில் முங்கித் தலை துவட்டிய
நான்
பதில் சொன்னேன்
நீருக்கு ஞாபகங்கள் கிடையாது
நகரும் எதற்கும் சரித்திரம் கிடையாது

கரையில் அவிழ்த்த ஆடையில் கிடந்த என் கால்கள்
என்னை விட்டுவிட்டு
நடக்கத்தொடங்கின

கெட்ட வார்த்தை சொல்லும் சிறுவன்

சிறுவன்
தனிமையில்
கிசுகிசுப்பாக உச்சரிக்கிறான்
அவன் அடிவயிறு பதறுகிறது
அவன் குரல் லேசாக நடுங்குகிறது
விருட்டென்று சுற்றியொரு முறை பார்க்கிறான்

மூச்சை இழுத்து
முகத்தை இறுக்கி
சற்றே உரக்க
அவனுக்கு மட்டும் கேட்கும்படி உச்சரிக்கிறான்
அவனுடைய குரல் அவனுக்குப் பிடித்திருக்கிறது
அந்த வார்த்தையைச் சொல்லும்பொழுது
அவனுடைய நாக்கு மிருகத்தின் கூர்மையான நகம் போல மேலண்ணத்தைக் கீறுகிறது
அழுகிய பழத்தின் கிறக்கமான சாறு நாக்கில் துளிர்க்கிறது
திறக்க மறுத்த பூட்டில் திரும்பும் சாவிபோல நாக்கு வளைகிறது

சிறுவன் இப்போது உரக்கக் கத்துகிறான்
முஷ்டிபோல
நாக்கை மடித்து உயர்த்தி

நடனம்

மண்ணின் இருள் அதன் வேரிலிருந்து நுனிவரை நீள
அந்தச் சிறு செடி பசும் கரங்களை முதல் முறையாக விரிக்கிறது
அப்பழுக்கற்ற ஒளி செடியின் கரங்களைப் பற்றுகிறது
மெல்லத் தொடங்கும் நடனத்தில் செடியின் அசைவுகள் நேர்த்தியற்று இருக்கின்றன
ஒளியின் சிறு அசைவும் செடியின் உடலில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது
செடிக்கு வெட்கமாக இருக்கிறது
நேர்த்தியான அசைவுகளைப் பிரார்த்திக்கிறது
பறவைகள் சீராக வானில் பறக்கின்றன
பக்கத்தில் நிற்கும் பெருமரம் செடியைக் கேட்கிறது
அவற்றின் சிறகடிப்பு ஒத்திகை பார்க்கப்பட்டதா
செடிக்குப் பதில் தெரியவில்லை
ஒரு சிறுபெண் செடிக்கு அப்போது நீரூற்றுகிறாள்
செடி நீரின் ருசியை ஒளிக்குத் தருகிறது
அப்பழுக்கற்ற ஒளியின் உதடுகள் ஈரத்தில் மின்னுகின்றன
செடி ஒளியை முத்தமிடுகிறது தன்னிச்சையாக
அவள் செடியையும் ஒளியையும் பார்த்தபடி நிற்கிறாள்
அவள் பாதங்களில் செடியின் ஈரம் பரவுகிறது
அவள் கண்களில் இரவில் நகரும் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
அவள் உடலில் பாயும் ரத்தத்தின் ஈரத்தை
முதன்முதலாய் உணர்கிறாள்
செடியின் கரங்கள் அவள் உடலுக்குள் நரம்புகளாக
நுழைகின்றன
ஒளியின் கரம் அவள் இடுப்பைப் பற்றி
அவளை மெல்ல உயர்த்திச் சுற்றுகிறது
கால்களுக்கிடையில் பொங்கும்
காற்றில் குடையாய் விரிகிறது
அவள் பாவாடை

காலத்தின் மோதல்

நடுவானிலிருந்து திடீரென
முளைத்துத் தொங்கியது
ஒரு பெண்டுலம்

இரவில் நிலைத்துவிட்ட மனிதர்கள்
தொங்கும் பெண்டுலத்தைப்
பிடித்து ஊஞ்சலாடிப்
பகலுக்கு வந்தார்கள்.
பகல் மனிதர்கள்
பெண்டுலத்தின் நிழலில்
இரவென உறங்கினார்கள்

முடிவின் ஆரம்பம் இதுவே
என்ற சாமியார்களின்
கைகளில் நீண்ட ஆலயமணிகள்
நாக்குகளைச் சத்தமின்றி உதிர்த்தன

தயார் நிலையில் ராணுவ அதிகாரிகள்
தளவாடங்களின் பளபளப்பில்
மீசையைத் திருத்திக்கொண்டார்கள்

கடவுளின் விறைத்த குறிபோல
அதிர்கிறது பெண்டுலம்
என்ற கவிஞனை
பெண்ணியவாதிகள் கொடும்பாவி
கொளுத்தினார்கள்

ஒரே சமயத்தில் எல்லாக் கடிகாரங்களும்
திகைத்து நின்றன

கடிகாரங்களுக்கு எப்படி இறுதி மரியாதை செலுத்துவதென்று
புரியாத மனிதர்கள்
பனிக்கும் கண்களை
ரகசியமாகத் துடைத்துக்கொண்டார்கள்

மலைத்துப்போன மனிதர்கள்
மலையாய்க் குவித்த கடிகாரங்கள்மீது
பெண்டுலம் மோதியது

தூக்கத்திலிருந்து திடீரென விழித்தவன் ஒருவன்
தெருவில் ஓடினான்
'இதுதான் காலத்தின் மோதல்' என்றபடி

No comments: