நல்ல
குருதிகாய்ந்த தம் குதத்தை
இரவுபகல் பாராது
கழுவிவரும் வேசிகளின்
தொழில் அது அல்ல.
காலைமாலை கணக்கின்றி
ஆசைகளின் வியர்வை
ஆறோடி நனைக்கிறது
யாஹ§ அரட்டை அறைகளை.
நல்ல கணவர்கள்
வெப்காம் பயன்படுத்தமாட்டார்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில பெண்கள்.
நல்ல பெண்மணிகள்
குழந்தையைப் பேணுபவர்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில ஆண்கள்.
நல்ல குழந்தைகள்
கைகளால் எழுதமட்டுமே செய்வார்கள்
என்று
பல ஆண்களும் பெண்களும்.
தொலைக்காட்சித்திரை
அத்தாட்சி வழங்கிய
நல்ல குடும்பத்தின்
ஒரு உறுப்பினர்
கடன்வாங்கப்பட்டவர்
என்று
எய்யப்பட்டுவிட்டது
பொறாமைக் கடிதாசி.
எது எப்படியோ
உன் என் மனச்சுவர்களில்
ஒட்டி நகராத பல்லியை
யாரும் இன்னும் நேர்காணவில்லை.
n
கிறுக்கன்
அவசரமாய்க் காலைக்கடனை
மாலையில் கழித்து
அவசரமாய் அள்ளித்தின்று
இருசக்கரவண்டியில்
மூன்றாவது சக்கரமாகி
இரவுதோறும் ஓடும் அலுவலன்
அவசரமாய்ச் சொல்லிக்கொண்டான்.
நான் பீட்டர் நான் பீட்டர் என்று.
அவசரமாய்ப் பேசப்போகும்
பலரிடம் அவன்
ஆங்கிலம் பேசி
குறைகளைந்துகொண்டே
இருக்க
குறைகள்
இன்னும் இன்னும்
வேண்டும் இன்றும்.
பகலில் தூக்கத்திலும்
அவன்
இரவின் பச்சை நியான்
அமெரிக்க நெடுஞ்சாலையில்
நிலா முகிழ்க்கக்
காண்கிறான்.
வேண்டும்
வேண்டும்
வேண்டும்
டும்
டும்
தாளகதிக்கு
இறுகின கால்களுக்கிடையில்
நசுங்கிச் சுருங்குகிறது
கிளிக்குஞ்சு.
n
எதிர்
செல்போன்
ஒளித்திரையில்
உருண்டோடுகிற
நாளைகளின்
அடுத்த வாரங்களின்
மாதங்களின்
அழைப்புகளை
எடுத்துப் பேசிவிட்டேன்.
இனித்து அலுக்கிறது நாவில்
இருவருடங்கள்
கழித்து நடக்கப்போகும்
காதணிவிழா ஒன்றின்
பூந்தித் துகள்.
ஒரு நரைமுடி நீண்டு
இறுகக் கட்டுகிறது
என்
நெஞ்சு நின்றுபோகிறது
நேற்று.
n
உன்மத்தமே
உன் கால் கொலுசாக
என்னை அணியும்முன்
சில வார்த்தை,
ரோஜா நிறத்தின் என் வாந்தியை
முதலில்
நீ நிறுத்துக.
உன் சன்னிதியில்
என் கணினியின் கடவுச்சொல்
யாரையும் காட்டிக்
கொடுக்காதிருக்கட்டும்.
ஒருபோதும்
நினைவூட்டல்களுக்கு
ஆளாகாத
பெயர்களில் ஒன்றாக
சாம்பலின் அடிவாரத்தில்
நான்
உறங்கும் வரமும் கொடு
நீ ஆடி முடித்தபின்.
n
தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில்
மயக்கம் தராத மாலை
இன்றும் வந்தது.
விடியலின் கிரணத்தை
சன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்
அருமையாய் எடுத்திருந்தான்.
இருளின் மின்மினி
எதுவும் சொல்லாமல்
நேற்று பூச்சி கடித்தது.
மடிக்கப்பட்ட
வாசனைமிக்க விரிப்பு
மெத்துமெத்தென்று
தொடைமேல்.
ஸ்வீட்டி
என்னில்
யாரைக் காண்கிறாள்?
நான் காண்கிறேன்
ஸ்வீட்டியின் இமைகளுக்குள்
எல்லோரையும்.
மென்பழமாய் எரிகிற
விடிவிளக்கு
எண்ணூற்றிச் சொச்சத்தை
தின்றுவிட்டது.
மெகாசீரியல் காட்சியில்
வருத்தம்தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டு படுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி.
n
குட்டிப்பன்றியே
புலனுக்குத் தெரியா தெருநாய்களால்
வேட்டையாடப்பட்டு
குட்டிப்பன்றியாகக் குதறப்படுகிறாய்
என்று சொன்னது பொய்தானே?
நானோ
ஒவ்வொரு நடு இரவும்
உனக்காகவே ஒரு ஆப்பிளை
கவனக்குறைவாக
உனக்காகவே
கத்தியால் கீறி
சில சொட்டுகளைச்
சிந்துவது தவறாது
கடற்கரை நெடுஞ்சாலையில்
தம்மைப் பிணித்தபடி
செல்லும் காதற்பிணி கொள்ளா
காதலர்கள்
சிரிப்பை அறைகிறார்கள்
முகத்தில்
அந்நேரமும்
ஏன் ஏன்
எதிரே அலங்காரக்கடையின்
வண்ணவிளக்குகளில்
ஒன்றாகத்
தன்னை மாட்டித்திரிகிறது நிலா
அதில் தெரியக் கூடாது
உன் முகம் ஒருபோதும்
என்று
என் விழிப்புலனை
பிய்த்
தனுப்பினால்
நீ
கவனமாகப் பிரித்து
தாயத்தாக
உன் பல்
களில் இடுக்கிக்கொள்
என் குட்டிப்பன்றியே.
n
விழைகிறேன்
பித்தம் மிகத் தலைக்கேறும்போது
பிடித்தவரின் பெயரின் முதலெழுத்தைக்
கேட்க நெஞ்சம் பதறும்போது
வசவுச்சொற்களை தூக்கத்திலும்
விரல்கள் தட்டச்சுச் செய்யும்போது
எங்கிருந்தாவது இன்னிசையேதும்
காப்பாற்றட்டும் நம்மை.
இணக்கமற்ற நாட்களையே
பருவகாலம் வகுக்கும்போது
கழிவிரக்கத்தின் பூ
பூத்துக்கொட்டிப் பாதையை நிறைக்கும்போது
எண்ணத்தின் அழுக்கு வானை அடைந்து
கொடுமழையாய் யாரையோ மாய்க்கும் முன்பு
விசித்திரமேதும் திசைதிருப்பட்டும் நம்மை.
குருடான விதி வரைகிற ஓவியத்தை
நாக்கிழந்த பிரியம்
சொல்லிப் பார்ப்பதேது?
தெய்வமில்லாதபோதும்
பெருஞ்சுடருற்ற ஞாபகங்கள்தாம்
நம்மை மாய்ப்பதுமேது?
நற்கனாக்களாவது
நல்கப்படட்டும்.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment