Saturday, March 12, 2011

கவிதைகள் கவிதா

நட்சத்திரங்களற்ற இரவில்
நிச்சலனமான ஆகாயமாய்ப்
பெருகும்
ஒற்றைக் கண்ணீர்த்துளி.

ரயில் பயணங்களில்
தண்டவாள ஒலிகளுடன்
ஒத்திசைந்து கிளர்த்தும்
என் ஏகாந்தமான தனிமை.

நான் எழுத விரும்புகிறேன்
பின்னிரவின் அடர்ந்த கருமையிலோ
புலர்பொழுதின் வாத்ஸல்யமான கதகதப்பிலோ

துவேஷங்களற்ற என் கண்ணீர்த்துளி பற்றி
வாதைகளற்ற என் தனிமை பற்றி.

என்னிடம் எந்தப் புகாரும் இல்லை.

என் தனிமை மிகப் பிரத்யேகமானது,
எனது கண்ணீர்த்துளி போலவே.
அதற்கென்று ஒரு வாசமுண்டு,
ஒரு மொழியும்கூட.
சிறகுகளையத்த சுதந்திரத்தை
அது எனக்குத் தருகிறது.

ரகசியங்களாய்ப் பூத்திருக்கும் இந்தப்
பிரபஞ்சத்தில் என் தனிமை
ஆகக் கடைசி ரகசியம்,
என் கண்ணீர்த்துளி போலவே.

இந்த இரவில்
புலப்படாத தொலைவுகளில்
கண்ணீர்த்துளியாய் என் தனிமையும்
தொட முடியாத ஆழங்களில்
தனிமையாய் என் கண்ணீர்த்துளியும்
பிரம்மாண்டமாய் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன.

பிறகொரு நாள்,
நான் எழுதுவேன்,
துயரக்கனவொன்றின் சாயல்
படிந்திருக்கும்
இந்த இரவு பற்றி.

No comments: