சொந்த முகத்தின் குறுக்குவெட்டுத்
தோற்றமாய் நெஞ்சதிரச் செய்கின்றன
எல்லாமும்.
மரத்திலிருந்து மரம் குருவியிலிருந்து
குருவி.
சட்டென வழிகிறது கண்ணீர்.
மாவீரனின் முதுகெலும்பை மூடிப்
படுத்திருக்கிறது மண்மேடு.
மேய்ந்துகொண்டேயிருக்கின்றன
பசுக்கள்.
தோட்டமும் பசுக்களை விடுவதாக
இல்லை.
பனிக்குடம் உடைந்து பொத்தென்று
விழும் கன்றின் கனத்தில்
நசுங்குகின்றன புல் குழந்தைகள்.
யாரோ கதை சொல்ல
யாரோ கேட்டுக்கொள்கிறார்கள்.
கரைக்குப் போய் மீண்டும்
ஏரிக்கே திரும்புகிறது
படகு.
n
பழுத்ததாய்த் தேடி வந்தமர்கிறது
கிளி.
எதுவென்று கேட்க முடியாது.
காடெங்கும் பாம்புகள்.
சொல்லித் தீராத கதை
ஒன்றும் புரிவதாக இல்லை.
உயர உயர எழும்புகிறது
சுவர்.
உறைக்குள் மின்னுகிறது
வாள்.
கதிரவன் மறையும் நேரமிது.
இருள் சூழ்ந்து இமைமூட
நீ வருவதென்பது
வராமலேயே இருப்பதாகிறது.
n
நீ குகையைத் தேடியலைந்தாய்
நான் மலையைத் தேடியலைந்தேன்.
தவம் ஒன்றுதான்.
ஒருவருக்குத் துணையாய் மற்றவர்
எதிரெதிர் திசைகளில் சுற்றித்
திரிந்தோம்.
காற்றால் நிரம்பி நீராய் வழிந்தது
ஜாடி.
பாதி உறக்கத்தில் முனகினோம் . . .
'மலைமீது ஏதுமில்லை . . .
குகைக்குள்ளும் . . .'
தொலைந்த குழந்தைகள்
வேண்டும் நமக்கு.
மலையில் வழிந்துகொண்டேயிருக்கிறது.
குகைக்குள் நிரம்பிக் கசிகிறது
நிசப்தம்.
நள்ளிரவில் நீ விழித்திருக்கிறாய்.
காடெங்கும் அலைகின்றன உனது
கால்கள்.
உனக்குத் தெரியாது . . .
குளம் முழுக்க விண்மீன்கள் மிதக்க
தாமரைகளாய்ப் பூத்துக் கிடக்கும் வானில்
நானும் குழந்தைகளும் உறங்குவதும்
எதற்குள்ளும் எதுவுமில்லை
என்பதும்.
n
மடிப்புக் கலையாத மேலாடை
அலமாரியில்.
உன்னையும் காணோம்
என்னையும் காணோம்
குறும்புக் கையொன்று பூவைக்
கிள்ளியெறியத் தேனுக்காக அலைகிறது
சிட்டு.
தனக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை
என்கிறான் ஞானி.
மேலே நிலவு மிதக்கத்
தோகை விரித்துக் கூத்தாடி
செத்து விழுகிறது மயில்.
n
அழுக்கு நீர் அருந்தி ஒய்யாரமாய்
நடக்கின்றன வாத்துகள்.
மேலுலகில் பன்னீரில் மூழ்கிக்
களிக்கின்றன தேவதைகள்.
மாலையொன்று கழுத்தில் விழுகிறது.
பூக்களே இல்லை தோட்டத்தில்.
அது ஆணாக இருப்பதால்
இது பெண்ணாக இருக்கிறது.
மரமும் வேண்டும் நிழலும்
வேண்டும் நமக்கு.
வைரம் ஜொலிக்கிறது.
உண்மை புரிய மறுக்கிறது.
பொய்க்குப் பொருளே இல்லை.
குழம்பித் தானாகத் தெளிகிறது
சேறு.
யாருக்கும் கேட்காத தொலைவில்
பறவையொன்று தனது முடிவற்ற
கீதத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறது.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment