Saturday, March 12, 2011

வண்ணத்துப்பூச்சியின் வாக்குமூலம் சு. துரைக்குமரன்

நீண்ட துரத்தல்களுக்குப் பிறகு
என் அருகாமையைச்
சாத்தியமாக்கியிருந்தன
உன் விடாமுயற்சியும் பிடிவாதமும்
வண்ணமும் வனப்பும் மட்டுமல்ல
விடுதலை உணர்வும் விவேகமும்
உன்னை என்பால் ஈர்த்தன
என்றிருந்தேன்.
என் வண்ணக்கலவையின் வசீகரிப்பும்
வனப்பின் வளமையும்
உள்நோக்கத்தோடு உணரத்
தலைப்பட்டபோது
விடுதலை உணர்வும் விவேகமும்
உன் விரல்களில் சிறைப்பட்டிருந்தன.
என் நுட்பமும் மென்மையும்
உன் புத்திக்கூர்மையில் கிழிபட்டன.
மையத்திலிருந்த காதல்
விளிம்பு நோக்கி விரட்டப்பட்டிருப்பதை
நான் உணர்ந்தபோது
மற்றொரு
வண்ணத்துப்பூச்சியின் நுகர்வில்
பூவாய் நீ.
உண்மை பாடிக்கொண்டிருந்தது
சபிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியின்
பாடலையல்ல.

No comments: