Saturday, March 12, 2011

கவிதைகள் எம். யுவன்

பெருவெடிப்பு நிகழ்ந்த
நாளும் முகூர்த்தமும் துல்லியமாய்க்
கணிக்கக் கூடவில்லை - கணிப்பதற்கு
ஆளில்லையென்பதால். ஆயினும்
பின் வந்த
சிறுவெடிப்பு ஒவ்வொன்றும்
தேதிவாரியாய்ப் பதிவுகொண்டன.

வெடிப்புவாரியாய்
ஆனந்தம் கொண்டாடச் சிலரும்
துக்கம் கொண்டாடச் சிலரும்
காரணம் புரியாது திண்டாடப் பலரும்
தாமே உருவாயினர்.

இன்றுவரை நான்
கோடற்ற இடத்தில் சாலையைக் கடந்ததில்லை.
ஒழுங்காய்ப் படிக்காமல் தேர்வெழுதச் சென்றதில்லை.
வரிகள் எதையும் கட்டாமல் விட்டதில்லை.
நோன்புகளைக் கடைபிடிக்க மறந்ததேயில்லை.
பிதுர்க்கடன் தீர்க்காத திதிகளும் இல்லை.
பிறரை உறுத்தும் சொல்லை உதிர்த்ததில்லை.
தாமதமாய் அலுவலுக்குச் சென்றதும் இல்லை.

ஆனாலும்,
சற்றுமுன்
யந்திரத் துப்பாக்கியுடன் பெட்டிக்குள்
ஏறிவந்த காவலர்
என்னைத் தேர்ந்தது
ஏன் எதற்கு எப்போது
எதுவும் புரியவில்லை.

ஒருவேளை,
கைப்பையிலும் சட்டைப்பையிலும்
சருமத்திலும் சதையிலும்
எலும்பிலும் எலும்பு மஜ்ஜையிலும்
ஒளிந்திருக்கும் வெடிபொருளைக்
கண்டறியும் நிலைவாசல் தாண்டி
வந்ததில் கொண்ட நடுக்கம் உணர்த்தியதோ.
அல்லது, அன்றாடத்தின்
ஒவ்வொரு மூலையிலும்
உதைபடும் பந்தென நடுங்கும் உடல்
காட்டிக்கொடுத்ததோ?

அவர் திறந்து சோதித்து
விட்டுப் போன பையின்
வாய் திறந்தே கிடக்கிறது. அதை
மூடுவதற்கு
கூசுகிறது என் கை.

n

மண்புழுக்கள் இரவில் தூங்குமா?
அதைவிட,
மண்ணைத் துளைத்த புழுவுக்கு
இரவுபகல் உண்டா?
ஆராய்ச்சியாளரிடம் கேட்கலாம்.
விடை கிடைக்காது,
தோராயம்தான் கிடைக்கும். அதுவும்கூட
பூமிக்குள் நுழைந்து பார்த்து அல்ல.
மண்புழுவிடமே கேட்கலாம்.
பெண்புழுவிடம் கேட்டால் இன்னும் உசிதம்.
தூக்கம் உண்டு எனில்
உறங்க மறுக்கும் குஞ்சுகளைத்
தாயார்கள் தாலாட்டுவதுண்டா என்றும்
கேட்க வேண்டும்.
ட்ராக்டர் காலப் புழுக்களுக்கு
கலப்பைக் காலம் பால
இசையார்வம் உண்டா
மண்புழுவின் துயரப் பாடல்தான்
இரவின் இருளென ரீங்கரிக்கிறதென்று
கதை சொன்ன பாட்டி
புதைந்துவிட்டாளே, புழுக்களின்
குடியிருப்பில் கைவைத்தியம் சொல்கிறாளா

காங்க்ரீட் நகரத்தின்
இரவுகளில் இருளின் ஒலியாக
நான் கேட்கும் ரீங்காரம்
இடம்பெயர்ந்த புழுக்களின் சங்கீதமா
கனவுபோல மறைந்த பால்யத்தை
மீட்க முயலும் பேராசையா
கதைப்பாட்டியின் நினைவு தரும்
பிரமையா, அல்லது
உறக்கம் வராமல் தவிக்கும் புழுவின்
தன்னுணர்வோ?

No comments: