Saturday, March 12, 2011

கவிதைகள் எஸ். தேன்மொழி

11வது நிழல்சாலை


பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ
எதிர்ப்படுகிற மனிதர்களில்
எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்
முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்
முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும்
வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும்
வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும்
இந்தக் காலை புறப்படுகிறதே
நேற்றிரவு நிறைவு பெறாத பெண்மையும்
நிறைவுபடுத்தாத ஆண்மையும்
இந்தப் பகலில் எந்த மிருகத்தின் உருவத்தில் நடக்கும்
காதலிக்காகத் தசைகளைப் பெருக்குகிறவனின் உலகம்
பிரிவுக்குப் பின் இந்தச் சாலையை எப்படி எதிர்கொள்ளும்
கொலைகாரனும் கொலை செய்யப்பட்டவனும்
ஓடிய திசையினை அறிந்தவன் யார்
குடிகாரனின் வார்த்தைகள் சிதறிக்கிடக்கிற இடத்தில்
பவழமல்லியும் கிடக்கின்றன
இந்தச் சாலையைக் கட்டமைத்தவர்கள் யாரேனும்
இதனூடே நடந்து செல்வார்களா
கொடுங்கனவுகள் பற்றி நண்பர்கள் பேசிச் செல்வார்களா
முதுமையின் வியர்வையும் இளமையின் வியர்வையும்
வேறு வேறான இசையுடன் என்னைக் கடந்துபோகின்றன
பெண்களின் தளிர் உடல்கள் எல்லாப் பாடலிலும் ஊடுருவுகின்றன
என் விரல்இடுக்கு வழிநடத்தும் நாய்க்குட்டியின் கண்களில்
உணரப்பட்ட வாசனைகளின் குவியல்
காதுகளில் தொடர்ச்சியற்று விழும் உரையாடல்கள்
வாழ்வின் இறுக்கத்தைச் சற்று முடிச்சிடவும் அவிழ்க்கவுமாய்ப்
புரியவேயில்லை
11வது நிழல் சாலையில் என் தனிமையும் பயணித்திருக்கிறது.

No comments: