துருவேறிய பாத்திரமும் ஒரு முதிர்ந்த கிழவனும்
ஒரு வயது முதிர்ந்தவர் கோடைக்கால நடுப்பகலில்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
தலைகவிழ்ந்திருக்கிறார்
சோர்வு நிறைந்த அவர் முகத்திலிருந்து
நான் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை
பரந்த புல்வெளி அருகிலிருக்கும் மந்தைகள்
வெளிர் நிறத்தாலான துருவேறிய பாத்திரம் இவற்றைக்கொண்டு
நான் அவரை மேய்ப்பான் எனக் காண்கிறேன்
குற்றம் நிறைந்த என் விழிகளை அவர் அலட்சியம் செய்கையில்
உதிர்ந்துகிடக்கும் மஞ்சள் கொன்றைப் பூக்களூடே
என் படுகொலைப் பாடல்கள் அவரை நெருங்கிச் செல்கின்றன
என் முகத்திலிருந்து நான் தூர விலகிப்போய்விட்டேன்
எதையும் உறுதிப்படுத்த முடியாமல்
பல ஆண்டுகளின் பின்
நீயும் நானும்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில் மீண்டும்
அவரைக் கண்டோம்
அவரைப் பற்றிய ஓர் அழகிய சித்திரத்தை நீ வரையத் தொடங்கினாய்
நான் சில நவீன கவிதைகளை எழுதினேன்
உனது சித்திரம் அவரைப் பைத்தியக்காரராகக் கண்டது
எனது கவிதைகள்
அவரை மந்தை மேய்ப்பான் என்பது போலவே எழுதிச் சென்றது
அமாவாசை இரவொன்றில் உலகின் எல்லாக் கலைஞர்களும்
எமக்குப் பாராட்டுகளையும் பரிசுகளையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்
உன்னதமான கனவின் பொருளை அடைந்துவிட்டதாக
நானும் நீயும் மாறி மாறி முகர்ந்துகொண்டோம்
பின்னொரு நாள்
நானும் நீயும் அவர்களுமாக
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
அவரைக் கண்டோம்
ஒரு கூரிய உலோகத்தால்
அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தார்
காயத்திலிருந்து குருதி பெருகுகிறது
நாம் பேசிக்கொள்கிறோம்
அவரிடமிருந்து தூர இருந்திருக்கிறோம் ஆகவே
நாம் கொலைகாரர்களும் அல்ல துரோகிகளும் அல்ல
வயது முதிர்ந்தவரின் மரணச் சடங்கில்
பல்வேறு முகங்களும் முகர்ந்துகொண்டன.
Sunday, March 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment