Saturday, March 12, 2011

கவிதைகள் ஆகர்ஷியா

நம்மைப் பற்றிய கவிதை

ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக்கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

ஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடு தீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது. தொகுப்புகள் மூன்றும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளன.

No comments: