Saturday, March 12, 2011

கவிதைகள் சைதன்யா

நீண்டகரையில் பெரும் நண்டுகள்

உங்கள் பள்ளிக்கூடத்தில்
நண்டு பிடித்து விளையாடியிருப்பீர்கள்

அதன் இரு கொடுக்குகளைக் கண்டு
பயந்திருக்கலாம்

மீனைக் கோர்த்து நூலைச் சுழற்றும்
நண்டு வலைக்காரனைப் பார்த்திருக்கலாம்

ஆறு வற்றிய இடத்தில்
பாசானத்தில் ஒட்டியிருந்திருக்கலாம்

இரு நண்டுகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தபோது
உற்று நோக்கியிருந்திருக்கலாம்

இரவில் படுக்கையறையெல்லாம்
நண்டுகளாய்க் கனவு கண்டிருக்கலாம்

குளம், குட்டைகளில்
பொந்தில் புதைந்திருக்கலாம்

காய்ந்த நண்டின் ஓட்டை
நடைபாதையில் மிதித்திருக்கலாம்

ஆனால்,
நண்பர்களே
நண்டுகள் உங்களை ஒருபோதும் கவனிப்பதில்லை

நீங்கள்
நண்டாக இருக்கிறீர்கள்.

No comments: