Sunday, March 13, 2011

கவிதைகள் தேன்மொழி தாஸ்

இரவுகள்

சில ஆண்டுகளாய் என் ஆழ்மனம் இருளைக் காண்கிறது
எனது மொழியின் காலை என்ற சொல்லை
இரவுகள் கேலி செய்கின்றன
என் தனிமையைப் பார்க்கிலும் இரவுகள் கடினமானவை
மனதின் அந்தகாரம் புலம்பலாகவும்
உதடுகள் உடைந்த மகதியின் நரம்புகளெனவும் துடிக்கையில்
தண்ணீரின் வாசனை பற்றிய நம்பிக்கைகூடக்
காதலில் இல்லை
மாதங்களை நிர்ப்பந்தங்கள் எனவும்
ராவுகளைச் சஞ்சலங்கள் உலாவும் கல்லறைத் தோட்டம் எனவும் உணர்கிறேன்.
வாழ்ந்த மலைகளின் பள்ளத்தாக்குகளுக்குள்
இறந்த கால இரவுகள்
ஆற்றுக் கற்களெனக் கிடப்பதைத் தரிசிக்கையில்
நடுக்கம் என் தசைகளைக் கட்டுகிறது.
நாளை என்பது புறாவின் இறகுகளால் செய்யப்பட்ட
பட்டாம்பூச்சியெனப் பறக்கக்கூடும்
எனக்கோ
இரவுகள் நெய்கிற நூலென ஓடி
நம்பிக்கையற்று முடிகின்றன.
முதுகின் மேலும் கீழும் விரகம்
ராமுழுதும் தங்குகையில்
காதல் குளிர்காலத்துப் பனிக்கட்டி அவ்வளவுதான்
காதலுணர்வுகூட சிறகொடியும் ஈசல்
காமம் சாகத் தெரியாத பிசாசு
என் மீறுதல்களை நாட்குறிப்பேடுகளில் மூடி ஒளித்தால்
ஈவு எதுவாகவும் இருக்கும்
சாம்பலாக இயலாதவை எனத் தெரிந்தும்
காம வருத்தத்தை எருவாட்டியென உருட்டி
இராவின் முதுகில் எறிகிறேன்
ஆயினும்
ஒலிமுக வாசலில் பறவையென உறங்கவியலாத
காவலாளியைப் போல் இருக்கிறேன்.

n n n

ஆராரோ

நிழலுள்ள செடிகளை அறியாத காளானைப் போல்
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன
கூர்மையான நகங்கள் கொண்ட கால்களால்
காற்று இலைகளில் நடப்பது பற்றி
சருகுகளோ உதிரும்போது
காற்றின் பாதச் சுவடுகளைக் கண்களாக்கிவிட்டுச் சாகின்றன.
அப்போதெல்லாம்
நிர்வாணப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்
உங்களுக்குத் தெரியுமா
நதியின் துளிகள் மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை
ஆராரோ என்ற சொல்
காட்டுப் பூக்களின் வாசனையென்றும்
ஆரிரரோ என்ற சொல் மான்களின் விழியென்றும்
நான் யாரிடம் சொல்வது
அங்கங்கே நீண்டுகொண்டிருக்கும் மரங்களின்
கரங்களை அணைத்துப்
பைத்தியக்காரியைப் போல் இவற்றைப் பாடியலைகிறேன்.
மரங்கள் உறங்குகின்றன.
விடியற் காலையில் காட்டுக்குள் வீழும் ஒளிக் கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.

No comments: