Saturday, March 12, 2011

கவிதைகள் தேவேந்திர பூபதி

எண்ணுடல்


வெகுநாள்களுக்குப் பிறகுதான் தெரிந்தது
நான் ஒரு தொலைபேசி எண்ணாய் இருக்கிறேன் என்பது
அழைப்பு என்பது கொடூரமானது
உறக்கத்தின் மத்தியில் நடுநெற்றியில்
சம்மட்டியால் அடிப்பதை
ஒரு இனிய குரல் எப்படிப் பிசாசைப் போல அலறும்
மேலும் அது என் காதுகளைப் பிடித்துத்
தலைகீழாக வேறு தொங்கும்போது
உறங்காத என் இமைகளில் இருந்து
காதலின் சொற்கள் வெளியேறியபடியே இருக்கின்றன
அதனுடன் கொஞ்சம் வசவுகளும்
எனது பணி மேசையில் குதித்தாடும்
அழைப்பெண்களின் ஓசை
பாறைகளைச் சல்லிகளாக்கும்
இயந்திரத்தினுடையதிலும் சத்தமானது
பழைய முத்தங்களை இப்போது
மறுபரிசீலனை செய்கிறேன்
சில அதீதச் சிணுங்கல்களுடன் செல்லம் கொஞ்சுகின்றன
தாவரங்களைப் பற்றியும் மலைச் சரிவுகள் குறித்தும்
கதை சொல்பவையும் உண்டு
பணிமாற்றம் குறித்துக் கவலை மறைத்து
மகிழ்ச்சி தெரிவிப்பவை சில
கடுமையான விமர்சனமும்
கவிதைகள் குறித்துச் சிலாகிப்பவையும் வருகின்றன
எனது கண் எல்லாத் திசைகளிலும் இயக்கப்படுகிறது
எதிரே உருவமற்று என்னை ஆணையிடும்
குரல்களுக்கு முன்னால் எனது எண்
வெளிகளின் இணைப்பற்ற இடைவெளிகளில்
மௌனமாய்ப் பதுங்குகிறது
குரல்களின் வலையில் அகப்பட்டிருக்கிறது எனது உடல்
மாயச் சிலந்திகளின் கண்கள்
ஊடுருவும் ஒரு பார்வைக்கு முன்பாக
எனது தொலைபேசி அலறுகிறது.

n

புலிநகச் சகோதரர்

ஒருபுறம் புலியின் உருவமும்
மறுபுறம் ஒரு பிரபுவின் தலையும்
அச்சடிக்கப்பட்ட நாணயம்
ஒன்றுக்காகச் சகோதரனிடம்
ஏற்பட்ட தகராறு
தலைப்பகுதியில் தழும்பாய் எஞ்சியிருக்கிறது
அது செல்லாத காசு என்றறிந்தும்
என் பால்யம் பிறகு
எங்கு செல்லும் எனப் புரிந்தும்
மறையாத தழும்பின் கீழ்
சக உதிரம் தேம்புகிறது
காலத்தில் நான் புலியாகவும்
மறுபுறம் பிரபுக்களின் வேட்டையாகவும்
நிலம் கிடந்து தவிக்க
நாணயங்களுக்குக் கீழ் போர் நடக்கும்
காலத்திற்கு வந்து சேர்ந்தேன்
செல்லாத நாணயங்களைப்
பொறுக்கும் எந்த விரலிலும் இப்போது
புலிநகம் பளபளக்கிறது
பிரபுக்களோ
தங்கள் பால்ய காலத்தில் கிடக்கிறார்கள்.

n

பறவைகளின் பாடலுக்குத் திரும்புவது

இதற்கு முன் என் காதலைப்
பத்திரப்படுத்தியவளிடம்
எனது கபடமின்மையைச் சேகரித்தவளிடம்
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
கிளிக்குஞ்சைப் போல்
எனது அன்பை விட்டிருக்கிறேன்
அவள்தான் சொன்னாள்
நீ இன்னும் மாசடையவில்லை
உனது கண்களின் வஞ்சகமின்மையை
நான் அறிவேன்
நீ திரும்புவாய் ஒரு தேவதையின்
தாலாட்டிற்கு
ஒரு மலரின் அழகை ஆன்மீகமாய்க் காண்பதற்கு
இன்னும் உனது கால்களில் நோவு அகலவில்லை
அழைப்புகளில் வஞ்சகம் மறையவில்லை
உனது வானம் மழையை மையமிடவில்லை
நதிகளிலோ அசுத்தங்கள் கலக்கின்றன
இருப்பினும் திரும்புவாய்
பறவைகளின் பாடலுக்கு
நெருப்பின் பழம் தன்மைக்கு
அல்லது ஒரு கனியின் உந்துதலுக்கு
கனவுகளில் அவள் கூவுகிறாள்
திரும்புவாய் உன் ஜீவிதத்திலிருந்து
ஒரு தாய்மைக்கு
அதனின்றும்
பத்திரப்படுத்துவேன் உன் காலத்தின் களங்கமின்மையைப்
பால்மணம் வீசும் உன் முத்தத்தையும்.

No comments: