Saturday, March 12, 2011

கவிதைகள் சுதீர் செந்தில்

அந்தரங்க ஆடைகளைக் களவாடியவன்

இரவு
ஒளி உமிழும் நிலத்தில் இருந்து
வெளியேறிக்கொண்டிருந்தது

பூனையின் கால்களோடு திரிந்தவன்
உன் அடர்ந்த காட்டில்
பெருகும் வாசனையில்
வேர்களைத் தேடி நிலம் அலைகையில்
நெருப்புக் கோழி ஒன்று துரத்த
அது
நீ விரித்த மாய வனத்தில்
தலை புதைத்து வீழ்ந்தது

பின்
ஒரு குறியாய் நிமிர்ந்து
உன்னுள் நுழைகையில்
இதழ்கள் பருகி ருசித்தாய்

ஆந்தைகள் அலரும் கனவில்
விரிந்த ரகசியத் தடங்களின் வழிபற்றி
உன் உயிரை உறிஞ்சத் துடிக்கும்
அட்டைப்புழுக்கள் சூழ்ந்திருக்க
உன்னுள் உயிர்த்து
உன்னுள் மரிப்பவன்

மரணமும்
உயிர்ப்பும் இல்லாத பெருநகரின்
சந்தடி மிக்க வணிக வளாகத்தில்
உன் அந்தரங்க ஆடைகளைக்
களவாடிச் சென்றவனை
குரல்வளை கடித்து
உயிர் தின்றபொழுது

நீ
நீலவானமாய் விரிய
பொழிந்த மழையில்
மயக்கம் கலைந்தவன்

வானத்திற்கு அப்பால்
நீ வெண்மேகமாய்
மறைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.

No comments: