Sunday, March 13, 2011

கவிதை சத்யன்சிபி

உனக்கும் எனக்குமான வேறுபாடு

கொலைவாளாய்த் துரத்திக்கொண்டேயிருக்கின்றன
உனது கண்கள்
நாளும் மழை பொழியும்பொழுது
நனையாமல் ஒதுங்கிக்கொள்வாய்
நான் நீராய் ஓடியோடி
மடையென மாறி வயலில் நிற்பேன்
உறிஞ்சு நீ சூரியனாய்
என் விரல் பூத்து மணிமணியாய்
விளைவித்துக் கொடுப்பேன்
நீ நடனமாடு
நான் உனக்கு விழா எடுப்பேன்
காலைச் சுற்றிய நாயைப் போல்
நீ உதைக்கிறாய்
நான் உழுகிறேன்
நான் யார், சிற்பி உழவன்
நான் கடவுள்
என்ன செய்வாய் நீ
ஒரு சிற்றெறும்பின் பசிபோக்க
இயலுமா உன்னால்

என்னைச் சாராமல்

நான் நுகரும் நிழலும்
என்னைவிட்டு நடக்கக் கற்றுக்கொண்டது
அகத்தின் வாசலில் என்னைவிட
அதற்கான
பரிமாணங்கள் முக்கியமானவை
என் விரைப்புகளின் ஒளித்தடங்களில்
கரும்புள்ளியாய்க்
காற்று மறைகிறது
சாயல்களின் ஆதரவோடு
இயங்க வேண்டிய அவசியமல்ல
மழைத்துளிக்கு
நீண்ட அலங்கோலமான வார்த்தைகளிடையில்
மெய்மையின் மெய்யறிந்து
மீண்டும் வரும்
என்னிடம்

No comments: