சோணி என்றொரு பொம்மை
பொம்மைகளை உறங்கச் செய்வதில்
சாமர்த்தியம் கொண்ட சோணி
தூங்கத் தெரியாதவனைத்
தூங்குவதற்கென அழைக்கிறாள்
பொம்மைகளை உறங்கச் செய்வதில்
என்ன சாமர்த்தியம்
எப்படி பொம்மைகள் உறங்கும்
உறங்கியபடி தானே பொம்மைகள்
என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்
சோணியிடம்
சோணிக்கு எதுவும் தெரியாது
பொம்மைகளை உறங்கச் செய்கிறாள்
(ஜோ . . . ஜோ . . . ரே . . . ரே . . . என்ற பாட்டு வேறு)
படுக்கை விரித்துத் தூங்கச் செய்ய
தூக்கம் வராதவர்களை எல்லாம் அழைக்கிறாள்
யாரும் தன் அழைப்புக்கு வருவதில்லையென்பதால்
பொம்மைகளை உறங்கச் செய்கிறாள்
கேள்வி கேட்பவர்கள் யாரும்
அவளது அழைப்புக்குச் செல்வதில்லை
என்பதால்
அவள் தூங்கச் செய்கிறாளா இல்லையா
என்று தெரியாது நமக்கு
இதோ பாருங்கள்
காலம் முழுவதும் தூங்கும் பொம்மைகளையே
நாம் பார்த்துக்கொண்டிருப்பதால்
பொம்மைகளை மட்டுமே
தூங்கச் செய்கிறாள் என்று மட்டும்
நினைத்துவிடக் கூடாது
இப்போதுகூட சோணி
புதிய பொம்மைகளைக் கடைகளில் வாங்கச் சென்றிருக்கிறாள்
தூக்கம் பொம்மைகளின்
தூக்கம் கலையக் கூடாது என்பதற்காக
சோணி தன்னைப் போலுள்ள பொம்மையை வைத்துள்ளாள்.
பொம்மைகளின் ஊடே.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment