Wednesday, March 16, 2011

சிறுமியும் தேவதையும் வைரமுத்து

திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

* * * * *

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

No comments: