உன்னை நிறைத்த அறை
உன்னை நிறைத்த உனதறையில்
நீயில்லாதபோது நுழைந்தேன்
உறங்க நீ பட்ட பிரயத்தனங்கள்
படுக்கையில் கசங்கிக் கிடந்தன
சுவர் மூலையில்
உறுப்பின் அசௌரியங்கள் சுருண்ட
உன் உள்ளாடைகள் கிடந்தன
அலம்பாத தேநீர் குப்பியில் ஒட்டியிருந்தது
உன் எச்சிலின் இனிப்பு
விரித்துக் கிடத்திய புத்தகத்திலிருந்து
கவிதையின் நெகிழ்ச்சி
அறையெங்கும் சுழன்றது
உன்னோடு வாய்க்காத பொழுதை
உன் வாழ்முறை இறைந்த அறையில்
உன் ஒழுங்கீனங்களோடு கழித்தேன்.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment