Saturday, March 12, 2011

கவிதைகள் வா. மணிகண்டன்

கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள்
வினைல் பெண்.
இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.
மடிப்பில் ஊர்ந்த
விளக்கொளியின் இருள் எறும்பைக்
கரங்களை நீட்டித்
தொட முயன்றேன்.
கூச்சமாக இருந்தது.
தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.
வெம்மையான நிலம் குறித்துப்
பேசும்போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினை
நினைத்துக்கொள்வேன் என்று.
சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக்கொண்டாள்.
குழப்பத்தில்
அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவன்.

n

எவருடைய நிழலும்
வருடியிராத
இந்தப் புள்ளியில்தான்
எரிமலையின் சிதறலொன்று
கடந்து சென்றது.

n

என் ஜன்னலைத் திறந்தால்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது. சகதியப்பிய முகத்துடன்.
துருத்திய பற்கள் அதன்
அமைதியைக் குலைக்கின்றன.
தெரிந்த முகங்களைத் தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.
தூர நின்று பார்த்துவிட்டு நகரும்
மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி வரும் காக்கைகள்.

தவிர
வேறு யாரும் வருவதாக இல்லை.
இரவில் மழை நனைக்கலாம்
நாளை
வெயில் அதன் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்.
அல்லது கூட்டிச் செல்லச் சொல்லும்.

அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.
எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்துவிட வேண்டும்.

n

பிளாட்பாரத்தில்
தொடை தெரியத் தூங்குபவள்
பஸ்ஸில் முறைத்தவளை
ஞாபகப்படுத்துகிறாள்
தலை நசுங்கிக் கிடப்பவன்
கழுத்தில் பொருந்துகிறது-
நேற்று மணக்கோலத்தில் பார்த்தவன்
முகம்
காயத்தின்
குருதியில் தெரிகிறது
உன் உருவம்.
அடையாளமற்ற
புள்ளியில் திருகுகின்றன
நிகழ்வுகள்

n

மஞ்சள் வெயில்
பூ
காதல்
மழை
பறவை
நீ
அல்லது
நான்
என்று எளிதாகச்
சொல்ல முடிவதில்லை.
மரணத்தை.

No comments: