Saturday, March 12, 2011

கவிதைகள் சுகுமாரன்

காலயந்திரம்

புது வீட்டு வாசல் நிலையில்
கதவைப் பொருத்திக்கொண்டிருந்தார்கள்.

பொருந்தியதா என்று
முன்னும் பின்னும் கதவை அசைத்தார்கள்
அசைவில் உண்டாயின
வீடும் வெளியும்.

வேடிக்கை பார்த்திருந்த
சித்தாள் பெண்ணின் குட்டிச் சிறுமி
எல்லாரும் நகர்ந்ததும்
கதவில் தொங்கி
முன்னும் பின்னும் அசைத்தாள்.

பாதி மூடிய கதவு
உள்ளே திறந்தது. சொன்னாள்:
‘பாட்டி வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்தாச்சு.’

இன்றிலிருந்து பிதுங்கிய ஒரு நொடி
காலத்தை மீறி
விரிந்தது
விரிகிறது
விரிந்துகொண்டேயிருக்கிறது.

சிந்துபாத்தின் கடற்பயணம்

முற்றத்துக் கையகலக் குழியில் நெளியும்
மழை மிச்சத்தில்
ஏதோ செய்துகொண்டிருந்தான் சிறுவன்.

நீர்மேல் ஒரு காகிதத் துணுக்கு
அதன் மேல் ஓர் எறும்பு.

கேட்டதற்குச் சொன்னான்:
‘கன்னித் தீவுக்கு
சிந்துபாத்தின் கப்பலை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’

குழிக்கடலில் அப்போது
சீறிப் புரண்டது
ஒரு பேரலை.

No comments: