Sunday, March 13, 2011

கவிதைகள் கவிதா

கவிதைகள்

கவிதா



புதுமைப்பித்தன் நூற்றாண்டை முன்னிட்டு பெண் கவிஞர்களுக்காக
நடத்தப்பட்ட போட்டியில் தேர்வு பெற்ற முதல் பத்துக் கவிதைகள்.

கவிதைகளின் தரவரிசைப் பட்டியல் சென்ற இதழில் வெளியானது.

n n n

காலத்தின் மீது என்
காலடித் தடங்களை விட்டுச் செல்கிறேன்.

மவுனங்கள் கடந்தேறி
என் தடங்கள் தொடர்ந்து
நீங்கள் வந்து சேருமிடம்

பைத்தியக்காரர்களின் கூடாரமாக இருக்கலாம்.

பின்ஜாம வேளைகளில்
யாருக்கும் தெரியாமல்
நீங்கள் கண்ட ரகசியக் கனவுகள்
பற்றி
அங்கே
அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் கேட்க விரும்பாத பாடலொன்று
அங்கே ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

கடந்துவிட்டதாக நீங்கள் நினைத்த சிறுபிராயத்து
பயங்கள் சில
முகமூடிகள் களைந்து உங்களையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன

குருதி தோய்ந்த வன்மத்தோடு
என்னைத் தேடித் திரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

உங்கள்
பயங்களின் பார்வையாகவும்
பைத்தியக்காரர்களின் சிரிப்பாகவும்

அங்கேயேதான் நான் இருக்கிறேன்.

n n n

சந்தியாவின் முத்தம்

சந்தியா அப்படிச் செய்திருப்பாள்
என்று
நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
சந்தியா அப்படிச் செய்யும்வரை
அவள்கூட
அப்படி நினைக்கவில்லை.
அன்றைய வகுப்பின் அவமானங்களை
காலி வகுப்பறையில் அவள்
அழுது கரைத்துக்கொண்டிருக்கும் போதுதான்
சந்தியா அதைச் செய்தாள்.
அழுது வீங்கிய கன்னங்கள் துடைத்து
சந்தியா முத்தம் ஒன்று கொடுத்தாள்.
அந்த சந்தியாவிற்குப் பிறகு
அவள்
பல சந்தியாக்களைப் பார்த்துவிட்டாள்.
வளர்ந்து பெரியவளாகிவிட்ட அவள்
உலகில் இப்போது
முத்தம் தந்த சந்தியா இல்லை.
ஆனால் சந்தியா தந்த முத்தம்
அவள் வாழ்க்கையின் மீது
மூழ்கவியலாத ஒரு கப்பலைப் போல
மிதந்துகொண்டேயிருக்கிறது.

n n n

மல்லிகை சூடி
சந்தனம் பூசிக்
காத்துக்கொண்டிருந்தாள் அவள்.
காத்திருப்புகள் கருகத் தொடங்கும்போது
வந்து சேர்ந்தது அந்தச் செய்தி.
அவள் எரிந்தாள்.
எரிந்துகொண்டிருந்த உடலிலிருந்து
சந்தன முலையைக் கிள்ளி எறிந்தாள்.
ஊர் எரிந்தது.
உயிர் எரிந்தது.
காடுகள் எரிந்தன.
காலங்கள் எரிந்தன.
அவளின் பாதித் தகிப்பில்
வெந்து அழிந்தது ஒரு நகரம்.
மீதித் தகிப்பைப் பகிர இடமின்றித்
தவித்து அழுதாள்.
மூழ்கவும் முடியாமல்
மீளவும் தெரியாமல்
அவளின் ஒரு துளிக் கண்ணீரில்
இன்னும் மிதந்துகொண்டிருக்கின்றன
சில யுகங்கள்.

No comments: