ஒரு முத்தத்தின் அவகாசம்
முத்தங்களை ஒருபோதும் அறிந்திராத ஒருவன்
தன் கதவினைத் தாளிட்டுக்கொண்டான்.
முறிந்த பனையின் வெறுமையோடு
அமைதியாகிக் கிடக்கிறது வீடு
நீண்ட காற்றுக்குப் பிறகு
பசுவின் மௌனம் போலொரு
அசைவுடன்
வந்திறங்குகிறாள் அவள்.
அவகாசமற்றுத் துழாவும்
அவள் கைகளுக்குக் கிடைக்கின்றன
சொற்பக் குளிகைகள் மாத்திரம்
உரத்துப் பெய்யும் மழையின் மனதோடு
உயிர்ப்பிக்கத் துவங்குகிறாள்.
நம்பிக்கையின் விடுதலையைப் பற்றி
யாதொரு அறிதலுமற்ற அவன்
தன்னிடமிருந்து
விலகிக்கொண்டு விடுகிறான்.
தூரமாகக் கிடக்கின்றன அவனது
கறுத்த உதடுகள்
அவள் ஒன்றாக்குகிறாள்
சற்று யோசித்து
எங்கோ பார்த்து
பிறகு
ஒரு முத்தத்தினைத் தானமாகக்
கொடுக்கிறாள்.
கடுகு இறைத்த மண்ணின் மணம்
ஒட்டிக்கொண்டது
அவளது உதடுகளில்.
முதலெழுத்து
புரைக் கேறும் நாடியின் நடுவாதத்தில்
நரம்புதேடி ஆழத்தில் புதைகிறேன்
காட்டேரியின் பிளப்பை உறுதிசெய்து
கருஞ்சிவப்பை உதற
ஓர் எழுத்தினை நுகர்கிறேன்
மோகம் பிடித்த நான்.
வரியும் வளைத்த சுழியும்
புதைபொருளாய்ப் பித்துப் பிடிக்க
சுரண்டி தொழியகற்றி
எறும்பென
வளர்த்துப் பின் ஊர
ஆகிறது அதன் வடிவம்.
நயன சஞ்சீவியின் நீர்க் குழம்பில்
துளைத்த அதன் சிரசில்
ஒரு தும்பைப் பூ வைக்க
கோட்டை மதில்மீது ஏறுகிறேன்.
சுவர் இடிந்து நுழைந்தவர்கள்
அம்பாடி பாட்டோ டு தூக்கியாடினார்கள்
என் எழுத்தின் கழுத்தை.
நீ என்றான பிறகு
காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய்
அற்ப வாதங்களின் அருகில்
செல்ல நேர்கையில்
திசைகள் பிரிகின்றன.
நெருக்கமான கணங்களில்
திணறுகிறது
நீ அழுத்தும் அன்பு.
பிரிவது இன்னும் தடித்த தூரத்தில்
என்பதற்காகவாவது நாம்
பிரிய முயற்சிக்கலாம்.
ஆனபின்னும்
மீதூர்ந்த காற்றின் சுவை தேடி
மருகுகிறது தேகம்
கம்பக்கட்டு வானத்தில்
தெறித்துப் போவது
நீ சுழற்றிய நான்
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment