Saturday, March 12, 2011

கவிதைகள் கருணாகரன்

பரிசு

மணல்வெளிக் கோயிலில்
பாடுகளைச் சொல்லி
மன்றாடும் பெண்ணிடம்
வழிபாட்டின் ரகசியம் என்னவென்று
கடவுள் கேட்டார்

அந்த அதிகாலையில்
கடவுளின் குரல்
அவளுடைய செவிகளை அண்ட விடாது
பெருகிய போரொலி
கடவுளைத் தொடர்ந்து பேசவிடவில்லை
கடவுள் ஏதேதோ சொல்வதை
அவதானித்த அவள்
அவரை நெருங்கிப்போய்
அருகிருந்து விவரம் கேட்க முனைகையில்
பார்த்தாள்
பதுங்குகுழிக்கருகில்
கடவுளின் அங்க வஸ்திரம் தனியே கிடந்தது
அவளதைத் தீண்டிட முன்னே
அவளைச் சுற்றி
ஒரு பாம்பாக வளைந்தது
பிறகு
மேலெழுந்து போனது
எங்கோ

அவள்
தேவாலயத்தின் சுவர்களில்
தன்னுடைய தலையை மோதி அழுதாள்
தனக்கும் கடவுளுக்குமிடையிலான
பந்தத்தைச் சாட்சியாக வைத்து

பிறகு
மணல்வெளித் தேவாலயத்தில்
கடவுள்
நீண்ட நாட்களாக வர முடியாதிருந்தார்
அவளுடைய குரலும் வேதனையும்
அங்கிருக்கென்று

தேவாலயத்தில் நிரம்பிய
அவளுடைய குரல்
மணல்வெளியில் சுவறிக்கொண்டிருக்கிறது

m m m

யாரும் யாருக்காகவும் இல்லை

யாரும் யாருக்காகவும் இல்லை என்றபோது
இந்தப் பூமியில் இல்லை
பாதாளமும்
கோபுரமும்

நான் தேடினேன்
பாற்கடலை
அவன் தேடினான்
விசமலையை
கலசங்கள் உடைந்து வீழ்கின்றன

இருக்கட்டும் வான் வெளியில் பறக்கும்
நமது கனவுகளும்
பொய்யும்

கண்ணீரில் பிரதிபலித்த
முகங்களைக்
கடக்க முடியாமல் திணறிய
ஒரு காலம்
பழி நிரம்பி உறைந்தது

வழியற்ற வெள்ளாடுகளை
வேட்டையாடுகிறது
காடு
நான் நெருப்பைத் தின்கிறேன்
பாழும்
சேற்றில் நாற்றமெடுக்கும்
புழுக்களோடென்னைப்
பழகவைக்கிறேன்

இசை ஒரு நொருங்கிய
பாத்திரமாகச் சிதறிக்கிடக்கிறது
காற்றில் பரவுகின்றன
நெருப்புத்துகள்கள்

நாயெங்கே பூனையெங்கே
என் காலை இழுத்துக்கொண்டு போகின்றன
கரப்பான் பூச்சிகள்
பங்கருக்குள் இருள்
இருளுக்குள் இருக்கிறது பாம்பு
பங்கருக்கு மேலேயும் சுற்றுகிறது பாம்பு
சிறகோடு

m m m

திரும்ப முடியாத திசை

ஒரு நூலில் ஆடுகிறது
நாடகம்
கலக்கத்தின் முனை
இன்னும் கூர்மையடைகிறது

இரத்தத்தை ஊற்றிவிட்டுப்
பாத்திரத்தைக் கழுவுகிறான் கடைக்காரன்
இலையான்கள் தூங்கப்போய்விட்டன
நான் முழித்திருக்கிறேன்
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி
அழமுடியாமலிருக்கும் அக்மதோவா
யாரிடமும் பேசவில்லை
ரஞ்சகுமாரின் கோசலை
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.

திரும்ப முடியாத திசையில்
சென்றுவிட்டது படகு
மலையுச்சிக்கு வா
கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தைச்
சொல்லும் உன் கண்கள்

கடலின் ஆழத்தில்
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்
கரைய முடியாத துயரமும்
அவர்கள் திட்டிய
வசையும்

சாம்பல் மேட்டில்
காத்திருக்கிறான்
புலவன்
இரவு
அவனிடம் விடை பெற மறுக்கிறது
காலையைச் சந்திக்க அதனிடம்
எந்த வலிமையும் இல்லை
இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது
பிணத்தின் வாடை

எங்கே அந்தக் காகங்கள்
கடற்கரையில்
பாடமறுத்த தேவனை
அவர்கள் சிலுவையிலறைந்தபோது
எழுந்த குரல்
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.

திடுமுட்டாக வந்த விருந்தாளியை
அழைத்துப்போய்
மாப்பிள்ளையாக்கினாள் காதலி
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளைக்
கூட்டிச் செல்கிறான்
ஊராடி

m m m

எதிர்முகம் நேர்முகம்

தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
என்னிடம் வந்தாய் அன்று
நிழலுமில்லாத
வெயிலுமில்லாத
ஒரு பின்னேரம்
ஒழுங்கையில் நாம் சந்தித்தோம்

யாருக்கும் தெரியாமல்
நினைவுகளையும் ரகசியங்களையும்
எடுத்துவந்திருந்தாய்
என்னிடமிருக்கவில்லை
துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்குமிடையிலான பாலம்
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்குமிடையிலான
தொடுப்புகள்.

பூவரசம் மரங்கள் காற்றில் அசைந்தன
தூரத்தில்
பனைகளின் பின்னே
நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது
மாலைச் சூரியன்

நான் இன்னும் சிறுவனா
இல்லை
நீதான் இன்னும் சிறுமியாக இருக்கிறாயா
அல்லது
இருவருமே
சின்னஞ்சிறுசுகளாகத் தானிருக்கிறோமா
காலம் எங்கே
மறைந்தது.

காற்றுக் குதூகலித்து முத்தமிடுகிறது
பூவரச மரங்களை
நீ தவிக்கிறாய்
பனைகளின் பின்னே
வானத்தை நிறம் மாற்றுகிறது
சூரியன்

இந்த ஒழுங்கையில்
மணலின் மேலே
இரண்டு குருவிகள் தீயில் எரிந்துகொண்டிருந்தன
அந்த மாலையில்

தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
நீ வந்தாய்

ஒரு மைம்மற் பின்னேரம்
என் தலையைச் சீவியெறிந்தது
எதற்கான பரிசாக
எதற்கான தண்டனையாக

No comments: