Sunday, March 13, 2011

கவிதைகள் சுகிர்தராணி

மின்மினிப் பூச்சிகள் மிகுந்த அடர்வானின்
பச்சை வெளிச்சத்தில்
கூடல்ஒன்று நிகழவிருந்தது.
முன்னர் நிகழ்ந்தவை எல்லாம்
வெம்மையைக் கிளறிவிட்டுப் போகும்
பருவம் தப்பிய மழையின்
சாயலுடையதாகவே இருந்தன.
பருவச் சாற்றில் அரும்பிய மலரென
அவனுடல் மேலெழும்பி நுரைக்கிறது.
மகரந்த நெடி பரவியிருந்த
அவன் தேகம்
வெளுத்த பாளையாய் வசீகரிக்கிறது.
சுழலும் காற்றாடியைப் போல்
எனக்குள் அவனைச் சுழற்றத் தொடங்கினேன்
இறக்கைகளை இழந்து
புள்ளியில் மறைய ஆரம்பித்தோம்
காற்றாடி
வெளியின் நிறத்தொடு கட்டுண்டிருந்தது.
கூடலின் முதல் விதியை
அவனது உடல்குளத்தில் துவக்கினேன்
அவன் திகைத்து விலகி
ஏழுகடல் தாண்டி மரமொன்றின் உச்சியில்
மாட்டியிருந்த மலட்டுக் குறியை
எடுத்துவரக் கிளம்பினான்
பின் எப்போதும் அவன் வரவில்லை.

n n n

இரவுகளைப் புணர்ந்து திரியும்
கள்ளத்தனமான விலங்கினைப் போல
மிகவும் மோசமானவளாக அறியப்படுகிறேன்.
இரண்டாகக் கிழிதலுற்ற என் முகம்
சலனமடங்கிய யுத்த களத்தின்
கந்தலாடையாய் நசிந்திருக்கிறது.
பருவ நாணில் பூட்டப்பட்ட என் குரல்
ரணங்களை மென்று விழுங்கிய
துயரத்தின் ஒலியொடு பயணிக்கிறது.
காம்பிலிருந்து விடுபட்டு
வெடித்துச் சிதறும் துரியன் பழங்களென
நாற்றமெடுக்கின்றன வார்த்தைகள்.
எரிமலையின் நெருப்புக் குழம்பு
இறுகிக் கிடக்கும் கோர வடுவாய்க்
குவிந்திருக்கிறது என் தேகம்
வழக்கொழிந்த வரைபடத்தில்
உறைந்த இரத்தத்தின் மீது
படிந்திருக்கிறது என் இருப்பிடம்
வெயில் வீசும் செங்குத்தான மலைச் சரிவில்
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை
என்றாலுங்கூட
என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

n n n

தீரா உயிர்

ஒலியற்ற ஓசைகளால் நிரம்பியிருந்தது
அவ்வறை.
பெருமழையின் ஈரத்தில் சரிந்துருண்ட
ஒரு மலைப் பாறையைப் போல்
உயர்த்தப்பட்ட கட்டிலில் அமர்ந்திருந்தார்.
உயிரோடு பிணைந்திருந்த அவரது உடல்
பூப்பொதியினும் மென்மையுற்றிருந்தது.
அடித் தோலின் சுரப்பிகளெல்லாம்
பொன்னிறமாய் மேலே திரண்டிருந்தன.
மேனியில் படிந்திருந்த வெள்ளாடை
அறையின் பிரகாசத்தைக் கூட்டியபடி
என் விழித் திரையை வியப்பிலாழ்த்தியது.
பழுப்பு நிற நதியில் நீந்திக்கொண்டிருந்த
அவரது கண்கள்
முப்பரிமாணக் காட்சிகளில் தப்பியிருந்தன.
நோயுற்றிருந்த சுவாசம்
ஆழமற்ற கடலின் அலைபோல்
மார்பின்மீது அசைந்துகொண்டிருந்தது.
தீர்ந்த காற்றினை அவர் தேடுகையில்
என் ஞாபகப் பால் சுரந்து
கட்டிலின் கால்களை நனைக்க ஆரம்பித்தது.
கொடூர விலங்கின் குளம்பொலி நெருங்கி வர
என்னுயிரையெல்லாம் திரட்டிப் பரிசாக நீட்டினேன்.
அவரும் அவருடையதை நீட்டியிருந்தார்
அப்பாவின் உயிரோடு வாழ்வது
கடினமாயிருக்கிறது.

No comments: