Saturday, March 12, 2011

கவிதைகள் எம். நவாஸ் சௌபி

பருவம் பிடுங்கும் தொடுகை

உனது ஒவ்வொரு தொடுகையும்
தொடுகையின் பின் நிகழும் எதுவும்
மீண்டும் மீண்டும் தொடரும்போதும்
அது கிழடு தட்டியதல்ல
ஒரு பாழடைந்த வீட்டைப் போன்றதுமல்ல.
உனது தொடுகை
பல கோடி மயில்களின் ஒன்றான வருகை
நிலவை அரைத்து அப்பியது போன்ற சுகம்
நீ தொடுவது மட்டுமே வாழ்வும்.
தொடுகையின் பெயரால்
உன் நுனிவிரல்கள்
என்னில் பூத்துக்கொள்ளும் அழகில்
மூச்சுக் காற்று மோதி
ஒரு நீர்வீழ்ச்சியாய் மார்பில் விழும்.
இன்னும் நீ தொடுகிறாய்
மலட்டு நரம்புகளிலும் இரத்தம் ஊறி
உணர்ச்சி பொங்க
நான் பூத்துக்கொண்டிருக்கிறேன்
இப்பொழுது
உன் விரல்கள் வண்டுகளாகவும்
இந்த வனாந்தரத்தில்
என்னைத் தொடரும் உன் தொடுகை
என் பருவத்தைப் பிடுங்கி
வானத்தில் எறிந்துவிட்டுப் போகிறது.

No comments: