Saturday, March 12, 2011

கவிதைகள் எஸ். செந்தில்குமார்

எம்பிராய்டரி வேலை செய்யும் பெண்

சேலையில் எம்பிராய்டரி வேலை செய்யும்
பெண்ணின் அந்தக் கைகளிலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கிறது
அபூர்வமாகச் சில பூக்கள்
ஓரிதழில் துளி நீரை உருண்டோடச் செய்வதில்
வல்லவளானவள்
பூக்களை நடு இரவில்
கள்ளத்தனமாகப் பறித்துக்கொண்டிருக்கிறாள்
பழைய புடவைகளை வாங்கிக்கொண்டு
எவர்சில்வர் பாத்திரங்கள் தருபவனிடம்
ஏராளமான கிழிந்த பூக்களும்
நெருக்கி ஒட்டித் தைத்த பூக்களும் இருக்கின்றன
ஒரு மாலை நேரத்தில்
பணி செய்வதற்கு மூளை வேலை செய்யாதபோது
திருடிய பூக்களை வானத்தில் தைத்துவிட்டுத்
தனது உடலில் உடுத்திப் பார்க்கிறாள்.

குழந்தையின் சதித்திட்டம்

அந்தக் குழந்தை கொன்றுவிடுவதாகப்
பயமுறுத்திய இரவிலிருந்து இன்றுவரை
என்னால் மீளவே முடியவில்லை
குழந்தை கொல்வதற்கு ஆயுதத்தை
எப்படிப் பயன்படுத்தப்போகிறது
என யோசிக்கிறேன்
குழந்தையைக் கொன்றுவிடுவது உத்தமம்தான்
ஆனால் ஆயுதத்தை?
கொன்றுவிடுவதாக
குழந்தை வெறுமனே
என்னைப் பயமுறுத்தியிருக்கிறது என
எனது நண்பன் சொல்கிறான்
தற்சமயம் அந்தச் சொல்லில் நிம்மதி கண்டு
உறங்குகிறேன்.

முன் சென்ற காலத்தின் சுவை

கிணற்றில் மதிக்கும் வேப்பம் பூக்களைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் அம்மங்கை
வழக்கமாக
மின்சாரம் தடைபடும் நேரம் நெருங்குகிறது
அப்பொழுது
கடந்து போகையில்
அவன் கட்டியணைத்து முத்தமிடுகிறான்
எந்த மறுப்பும் இன்றி முத்தத்தை
ஏற்றுக்கொள்கிறாள்
நரையின் நிழல் படர்ந்திருக்கும்
அம்முத்தம்
தடைபட்ட மின்சாரம் வந்ததும்
நிறம்மாறிடத் தொடங்குகிறது
கிணற்றில் காறி உமிழ்கிறாள்
அம்முத்தத்தை
பூக்களோடு பூக்களாய் மிதக்கிறது
காலம் தன்னைக் கடந்து சென்ற வேதனையில்.

No comments: