Thursday, March 10, 2011

கவிதைகள் - கடற்கரய்

நீந்தி மறையா மீன் குஞ்சுகள்

(1)
வரைபடத்தில்
மீன்களை நீந்தவிடும் - ஒரு
மகா கலைஞனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அவன்-
பரப்பி வைத்த
ஆகாய விளைநிலத்துக் கீழ் நின்று
காகங்கள் பறப்பதை
மலைத்துப் போய்ப் பார்த்திருந்தான்.
அந்நேரம்
தூரப் பிரதேசத்தில் எங்கோ
அவனது நுண்கலைகள் யாவும்
விற்பனை கூட்டிக்கொண்டிருந்தன.

(2)
நீந்தவிட்ட
மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து
கணக்கெழுதி வைத்திருந்தான் கலைஞன்.
நான்
திறந்த சமயம்
அவனது கணக்குப் புத்தகம் முழுவதும்
மீன்கள் நீந்தத் தொடங்கி இருந்தன.

(3)
தன்
நூதனக் கலைகள் பூராவையும்
பஞ்ச பூதங்களுக்குச் சமர்ப்பணம்
செய்யவிருப்பதாக
சொன்னான் கலைஞன்.
'இதில் என்ன இருக்கிறது-நீ
தானம் செய்ய' என்றேன்.
'உனக்கெதுவும் புரியாது' என
புன்னகைத்தான்.
அன்றென்
ரசனைத் தடாகத்தில் சில
அல்லிகள் மலர்ந்து திரிந்தன.

(4)
கலைஞனாக இருப்பதைப் பற்றி
ஒருநாள் என்னிடம்
பெருமை பிதற்றிக்கொண்டான் கலைஞன்.
'இதிலென்ன
தனி இன்பம் உனக்'கென்றேன்
'புரிந்துகொள்' என
ஒரு தூரிகை தந்து மறைந்தான்!

(5)
அவனது
மீன் குஞ்சுகள்
என் பிறவிப் பெருங்கடல்
நீந்த அலைகின்றன
இப்போது!

No comments: