Thursday, March 10, 2011

கவிதைகள் - கவிதா

நீல நிற மல்லிகை

ஊதா நிற
மல்லிகைப்பூவை நீ பார்த்திருக்கிறாயா?
நான் மடி நிறைய வைத்திருக்கிறேன்.
கடலின் தொலைவான ஆழத்திலிருந்து
வேர்களைப் பிடித்து வளரும்
அப்பூக்களை நான் உனக்கு
சற்று அறிமுகம் செய்து வைக்கிறேன்.
மலரிதழ்கள் மென்மையால் ஆனது
எனினும் அதன் பிடிமானம்
இரும்பையொத்தது
தூரங்களின் காப்பகங்களும் உண்டு
பல நிறமுள்ள தூக்கங்களின்
வர்ண ஜாலங்களில்
உன் கைரேகை படியும்போது
கொஞ்சம் சிவக்கவும் செய்யும்.
நீரற்ற நிலங்களின் தாவரங்கள்போல
அவை தனிமையுள் உறையும்போது
உன்னைப் பற்றிய பல ரகசியங்களை
வெளியிடுகின்றன.
அவை மேகங்களில் பூக்கும்போது
கணக்கற்ற உருவங்களாகவும்
தரை நோக்கி விரையும் பேரானந்தத்தில்
மழையாகவும் மாறிவிடுகின்றன.
நான் சூடிக்கொண்ட என்
கடல் நிற மல்லிகைச்சரம்
நீ மறுக்கும் வெளிகளில்
நனைந்து மலர்ந்து தளும்புகிறது.
ஒரு நொடி உன் விரல் கொடு
என் இதயத்தைத் தொட அனுமதிக்கிறேன்
உன் தொடுதல் உணரும்,
ஆதிகாலத்தின் பூக்கள் மலரும் இவ்விடத்தில்
என்னை நீல நிறப் பூவாக மாறும்படி
பணித்துவிட்ட
என் ஆதித்தாயின்
அழகுப் புன்னகை ஒளிரும்
துரதிடஷ்டவசமாகவும்
அதிர்ஷ்டவசமாகவும்
நீ சொல்லிக் கொடுத்தாய்
அடிமைகளின் நிறம் என்னவென்று...
நான் புரிந்துகொண்டேன்
நாகம் கொத்திய உடல் மாறும் நிறமும்
கண்ணனுக்கு ஓவியர்கள் கொடுத்த நிறமும்
பிரபஞ்சத்தை வளைத்து மோதும் கடல் நிறமும்
எப்படி நீலமாய் இருக்கிறதென
இனி
என் நீல நிறக் கருணையின் விசைப்படகு
செல்லும் திசைகளில்
உன் ஆயுதங்கள் செயலற்றுப் போகும்.
பழுப்பு நிற, மங்கலான உன் உலகத்தில்
கண்விழித்தால் பகல்
திரைச்சீலைகள் மூடினால் இரவு.
ஆனால் நான் என் நட்சத்திரங்கள்
ஜொலிக்கும் இரவுகளில்
கருமையின் பின்னே
ஆனந்தமாய்க் குளிர்காய்கிறேன்.
பகலிரவு தெரியாத பேதத்தில்
ஆகாயம் தரும் அமைதியில்
கடவுள் உறங்கும் இந்நேரத்தில்
என் முதல் கவிதையைத் தொடங்குவேன்.
என் கவிதையின் பாடுபொருள் நீதான்
ஆனால் நீ என் கவிதையில்லை.
ஆயிரமாயிரம் மறைக்கப்பட்ட
நீல நிறப் பெண் தெய்வங்களின்
புனிதக் காதல் வரலாற்றின் மீது
உன் கோரப்பற்கள்
ஊழல் கவிதையை எழுதத் துடிக்கின்றன.
உன் ஈறுகளில் கசியும்
உன் ரத்தத்தைத்தான்
இனி நீ சுவைக்க வேண்டும்
கதவற்ற வாசல்களில்
மொழியற்ற எழுத்துக்களில்
புதிர்களற்ற விடுகதைகளில்
இனி நீ என்னைத் தேடிச்
சலிக்கலாம்
இப்போது
உனக்குக் கொஞ்சமாவது
நீல நிறம் பற்றித் தெரியும்
என்று நினைக்கிறேன்.
மழைக்காலத்தின் குளிர்ச்சியும்
கடும் கோடையின் வெயிலும்
மரங்களைப் பிடுங்கி எறியும் புயலும்
உதிர்ந்தும் பூப்பெய்தியும் கருவுற்றும்
நான் மலர்கிறேன்.
என் நீல நிறம்
என் உதடுகளை
அணி செய்கிறது.
என் நீல நிறம்
என் கண்களில்
வைரத்தைப் போல
ஒளி வீசுகிறது.
என் நீல நிறம்
என் மார்புகளில்
எல்லையற்ற தூரங்களின்
நீருற்றை உற்பத்தி செய்கிறது
கருவறை பூ பூக்கும்
இந்நாட்கள் ஒன்றில்
உனக்கு ஒரு செய்தியைக் கூறுவேன்
அது
எனது நீல நிறத்தால் நெய்யப்பட்ட மற்றொரு பட்டுச் சிறகு

l

அவன் எழுதுகோல் காதலன்
அவள் பிரபஞ்சத்தின் வாசகி
காலம் அவர்களை நேர்க்கோட்டில் நிறுத்தியது.
அங்கு கனவு போன்ற ஒரு சிறுகதை
உருவாவதாக அவர்கள் நினைத்தார்கள்
அவன் வேண்டும்போது அவள்
தன்னை ஒரு முத்தமாக மாற்றிக்கொண்டாள்.
அவள் விரும்பும்போது அவன்
பெயரற்ற இசையாக வெளிகளில் கரைந்தான்
சிறுகதைக்குள் இருக்கும் அவன்தான்
அந்தச் சிறுகதையை எழுதுவதாக
அவன் நம்பினான்.
கனவிலுள்ள அவள்தான் நிஜமென்று
அவளும் நம்பினாள்.
அகாலம் சிரித்தது.
அவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்
தான் வசித்த கனவு கலைந்த கோபத்தில்
அவள் பைத்தியக்காரியாகவும்
களவுபோன எழுதுகோல் தேடி
அவன் நாடோ டியாகவும்
நமக்கு மிகவும் பழகிய வீதிகளிலேயே
திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

l

மேகங்கள் உலவும் மலை உச்சியில்
அவன் ஆத்ம சங்கீதம் தொடங்கும் போது
அவனுடைய வலுவான சிறகுகளில்
நானும்
ஒரு சிறகைப் போலப் பறக்க வேண்டும்.
இன்னதென்று அறிந்துவிட முடியாத
அவன் குரலின் மயக்கத்தைத் தேடி
அவன் கழுத்தில் உலவுகிறது
முத்தமென்னும் பறவை.
காலத்தின் சுவடுகள் தெரியும்
அவன் பாதத்தின் கீழுள்ள மலை உச்சிக்கு
படிக்கட்டுகள் இல்லை.
கண்ணீரை உயிரென உகுத்துக் கூறுகிறேன்
எனக்கென்றே என் கனவிலிருந்து
வந்த தேவதூதன் அவன்.
மேகங்களில் பொழிய வைக்கவும்
வெயிலை உருவாக்கவும்
கொடி மின்னல்களில் சிரிக்கவும்
அவன் கற்றுக்கொண்டிருக்கிறான்.
அறிந்த ரகசியத்தைப் போல எப்போதும்
அவனது காதல் தொழுகை
பிரபஞ்சத்தை
பூக்க வைக்கிறது.
நான் அவனிடம் கேட்டுக்கொண்டேன்
ஒரே ஒரு சொல்லில்
ஒரு கவிதை வேண்டுமென்று.
அவன் எழுதினான்
தன் குரலால்
என் நாவைத் திறந்து.
பிறகு நாங்கள்
இருள் பூக்கும் இரவிலும்
இரவு உறங்கும் பகலிலும்
ஒரே ஒரு சொல்லை
ஒரே ஓர் எழுத்தாக
ஒரே குரலில்
ஒன்றாகப் பாடிக்கொண்டிருந்தோம்.
அவை, கடவுளின் ரகசியங்கள்.

l

எல்லோரையும் விட்டு
என் சாளரங்களை மூடும்போது
திரவ வடிவப்
பூனை போல அது
என் வீட்டிற்குள் வந்து பரவுகிறது.
அதன் தோற்றுவாய்களில்
உலவும் இவ்வேளையில்
நிகழும் அதன் வரவு
ஒரு பெரும்பூதத்தின்
நிழலையும் ஒத்தது.
சட்டென்று கவியும்
கருமையின் அடர்த்தியில்
என்னையொத்த பறவையின் சிறகசைப்பு,
குலைந்து கிடக்கும்
என் இயல்புகளின் மீது
அதன் இருக்கையை
உருவாக்கிக்கொள்கிறது.
யாருக்காகவும் உதிர்க்கப்படாத
அவ்வார்த்தைகளுக்கான
மௌனத்தின் வெற்றிடத்தில்
என் கனாக்களிலும்
சொற்களிலும்கூடக் காண முடியாத
அழுத்தம் நிறைந்த
சொற்றொடர்கள்,
பிடித்த உணவு,
பிடித்த புத்தகம்,
பிடித்த நபர்,
பிடித்த ரகசியங்கள் யாவும்
என்னையே அச்சுறுத்தக்கூடியவை.
அதை
என்னுடையதென்று
நான் சொல்லிக்கொள்கிறேன்.
ஏதோ ஒன்று
எதற்காகவோ
என்னை அடையும்போது
நான் அதை
தனிமை என்னும்
சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான்.
ஆனால் எனக்கு
நிச்சயமாகத் தெரிகிறது.
அது தனிமை அல்ல.
அது நான்தான்.

No comments: