Thursday, March 10, 2011

கவிதைகள் - தபசி

என் கடவுள்

கடவுள்
எந்த ரூபத்தில்
காட்சி தருவார் என்பது
யாருக்குமே தெரியாது.
நேற்றுப் பாருங்கள்
கடவுள்
ஒரு Eureka Forbes நிறுவன
விற்பனைப் பிரதிநிதியாய்
வீட்டிற்கு வந்திருந்தார்.
வீடு பெருக்கித் துடைக்கும்
ஒரு இயந்திரத்தைக் காட்டி
அதன் செயல் நுணுக்கங்களை
விளக்கினார்.
எப்படியோ
கடவுளின் புண்ணியத்தில்
ஒரு பத்தாயிரம் ரூபாய்
கடனாளியானேன்.
கடவுளை
ஒரு லிமிசி ஏஜெண்டாக
நினைத்துப் பார்ப்பது
கொஞ்சம் துரதிஷ்டவசமானதுதான்
என்றாலும்,
வாழ்வையும், சாவையும் பற்றிப் பேச
அவரை விடப் பொருத்தமான ஆள்
வேறு யார் இருக்க முடியும்?
கடவுள்
பெண்கள் ரூபத்திலும் வரலாம்.
சில நேரம்
என் மனைவி குளித்துவிட்டு
மஞ்சள் பூசி
என் முன் வரும் போது,
கை எடுத்து வணங்கத் தோன்றும்.
(கல்யாணமான புதிதில்
முதல் ஒரு வாரமோ பத்து நாளோ
அவள் என்னை வணங்கியது-
காலில் விழுந்துதான்-
தேவையில்லாமல்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது)
இப்போதெல்லாம்
கடவுள்
செல்போன் திருடனாக வருகிறார்.
வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி
மோசடி செய்யும்
'டிப்டாப்' ஆசாமியாக வருகிறார்.
பல வருடங்களாக
ஊர்ப் பக்கமே திரும்பாத கடவுளை
ஓட்டுக் கேட்க வந்தபோது
எங்கள் ஊர் மக்கள்
மரத்தில் கட்டி வைத்து உதைத்தது
தனி ஒரு கதை.
எனக்கொரு சிறு சந்தேகம்
கடவுளுக்கு ஏதும்
உணர்ச்சி இருக்குமா என்று ...?
இருக்கத்தான் வேண்டும்
இல்லையென்றால்
மேலதிகாரி திட்டும் போது
எனக்கேன் கோபம் வர வேண்டும்?

No comments: