"பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்
கதவு
திறப்பதற்கா?
முடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடித்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளும்
சிறகுகளும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
முடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதை
கதவுகளே தீர்மானிகின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மை விட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
யார் என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம் ..."
Wednesday, March 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment