Friday, March 11, 2011

கவிதைகள் - பழனிவேள்

வெட்டுக்கிளிகளின் காதல்

சிக்னல் பச்சை விழுகிறது
காத்திருந்து
பின்பனியின் நடுக்கத்தோடு
இரட்டைவால் குருவி
நம்பிக் கவ்விவிடும்
இலைக்கும் புழுவுக்கும் பேதமற்று
இளவேனில் புதுச் சருகு
கூட்டம் கூட்டமாக அறுவடை நிலத்தைச்
சுற்றிலும் உயர்ந்தெழும்பி
இலைப்புயல் வீச்சு பரியதாக
சுழன்றேகுகிறது
உதிர்ந்த சில
தத்தித் தத்திச் செல்கின்றன
மயக்கத்தோடு வெட்டுக்கிளிகளும்
காதல் முடியாமல்
ஈருடல் தின்று உமிழ்கின்றன
சொல் ஒண்ணா ஓலத்தை
வேனிலின் முதுமையில்
சூரியன் சிவந்து
வற்றிய சருகுகளின் மீது
உறங்கிக்கொண்டிருக்கிறது
மீண்டும் காற்று வந்து உயிர்ப்பிக்க

மைல் கல்

5கல் தொலைவில் ஊர் இருக்க
இதுவரையிலும் அறிந்திராத தூரம்
நடக்கும் போது
மண் சாலையிலும்
தூரங்காட்டிக் கல் சொல்லுகிறது
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
உறக்கத்தில் உறங்காத மனம்
அதிர்ந்து
கசியும் அன்பின் அடிநீரில்
காலலம்ப முயலுகின்றனர்
நினைவில் நிற்கும் ஆவேசத்தில் பலர்
ஆனபோதும்
பழைய பாதரட்சையில்
எழும் புது சுருதி
ஒரு துணை
சிவந்த செங்குன்றுகளும்
செங்குன்றைப் பிளந்துவரும் மறிகளும்
மறி நடந்து எழும்பும் புழுதியும்
மீண்டும் ஒரு தூரங்காட்டிக் கல்
எண் - இலா குழப்பம்
எந்தக் கல் எல்லையில்
இந்த மலை வருகிறதென்று
எந்த மலை அலையில்
இந்தக் கல் விழுந்ததென்று

தகாப்பகல்

பல்சான்றீரே பல்சான்றீரே
காஜிரகேயில் சூரியன் இல்லை
மாறாக வெளிச்சம் டூரிஸ்டுகளின் பரவசத்தில்
மேலும் அதிகமாகும் தலைவலி
விண்ணென்று அதிரும் நரம்பொன்று
உடலிலிருந்து துண்டித்துவிடுமோ
காமம் தைக்கும் இவ்வேளையில்
கல்லாகிக் கசிந்துருக
பயணிகள் கூட்டத்தில்
பூனைக்கண் மொராக்கியன் துக்கிக்கிறான்
காலாவதியான விசாவிற்குக் கவலைப்படாமல்
நிலவின் தரிசில் குடியேறிக் காற்றைப் பயிரிடுவதனையும்
பயிர்க்காவலாக இச்சிற்பங்களை நிறுத்தி
காற்று விளையும் வரை
ஓரத்து நிலவில் மீன் வேட்டையாடுவதையும்
இடையே ஓர் அபானத்தைப் போட்டு
வெடிச் சிரிப்பு சிரிக்கிறான்
பால் கசியும் சாயல்களில் அவரவர்
தம் தம் வயது கடக்கும் பயணம்
நிலைபெற முடியாமல்
தடுமாறும் வலிமிக்க தலையை
ஆலிங்கனக் கல்லில் மோதி
சாந்தியுற
சிற்பத்துள் முனகும் சிசுக்கள்
புரளுகின்றன
உதிரப் பிசுபிசுப்போடு தலை

சில்க் ஸ்மிதா
பண்: நட்டபாடை

கனவு - மரங்களில் கிளைக்கிறது காற்றில் உளறும்
பூச்சிகள் இருபடித்தான இறக்கையில் அல்லாடுகின்றன
இரவின் தாகம் தண்ணென்று வளர - ஆழ்ந்து
நீச்சமடையும் உடல் சமன்விளையாட்டு முற்றி
பயிரிட்ட மயிரில் விளைந்தது பொய்ச் சவுரி - சலூன் சொர்க்கத்தில்
ஊதா செடிகள் கண்ணாடிப் பூக்களோடு அன்றலர்ந்து
தேன் சிந்த
பன்னிரு குதிரை பூட்டிய சாரட்டில் சில்க்
ஸ்மிதா என்ற விஜியலட்சுமி வரும்போது
பண்ணையில் யாருமில்லை நிச்சயமாக
சிலந்தி வண்டுகள் கரவிசெய்யும் தென்னையிளங் குருத்தை
இன்னும் காத்திருக்கும் இல்லரசியின் திமிர்த்த சரவுண்டுசவுண்ட்
மூலமாக வரலாம் மழையும் வரட்டும் மழையும்
மட்டற்றுத் துடிக்கும் பித்த கோரஸ்
நனவு - பாய்ந்தோடும் வைகாசியில்
படமெடுத்தாடும் வாயுவை எதிர்கொள்வதினும்
அந்தரத்தில் ஆடிய தற்கொலையின் தவம்
துருத்திய நாக்கில் ஒளிந்துள்ள மந்திரச் சொல்
விகாரமான காதல்
நல்கருணை வீரனையும் சந்திக்காமல்
தேவலாயப் பாடலும் கேட்காமல்
சவம் கிளம்பும்போது மூன்றாம் அகிலத்தின்
இளைய திருப்பதிகம் ஆரம்பமாகிறது

புதினா

புதினாவின் மலர்ச்சியைக் கட்டுக் கட்டும் முன்
அதிலிருக்கும் சேற்றினை நீக்க
தண்ணீர் விட்டு அலசுகிறாள்
கொள்ளாமல் வலிக்காமல்
மேசையில் அடுக்கி வைக்கிறாள் கலைத்து
மறுபடியும் அடுக்கி வைக்கிறாள்
சில துளிர்கள் முணுமுணுக்கின்றன
சில இலைகள் எட்டிப் பார்க்கின்றன
அவள் சொல்லாமலே கேட்காமலே
பம்முவதன் மூலம் அழைக்கின்றன
நறுவிசாக
சந்தையில் வருவோர் போவோரை
வாய்விட்டு வாங்கும் பெண்மெல் விரலால்
கொத்தாகப் பற்றித் தூக்கி
முகர்ந்தும் பார்க்கிறாள்
சில்லிடும் நாணத்தில்
நாணத்தில் கோணும் புதினா
புரிவதற்குள்ளே
பேரம் படியாமல்
அவளுக்கும் இவளுக்கும் நடுவே
பேசுவதற்கொரு வாய்ப்பாக மட்டுமே
இருக்கிறது

ஹாலோகிராம் நடனம்

நட்ட நடுச்சாலையில்
வினைல் ராணிஜி கண்ணடிக்கிறாள்
கூடுதல் சக்தியோடு
டிஜிட்டல் ஜாலம் ஜெகத்
ஜோதியாக ஹேலோஜன் விளக்கு
தேனிரும்புத் தூணில் எல்லாம்
சேர்ந்து
ஒரு மாய ஒளிமரம் ஆக
கண் கொள்ளாக் காட்சி
இவ்வொளி விழலில்
இரு புத்தபிட்சுகள் ஒதுங்குகின்றனர்
கப்பறையில் கைப்பிடி வாழ்த்து
கார்கள் ஒன்றையொன்று
தின்னும் நள்ளிரவில் குட்டியாகத் தனியே
விரைந்து செல்லும் ஜென் கார்
வடிக்கும் கார்பன் புகை
ரோஜாக்களை மலர்த்துகிறது
கூடிக்கூடிக் கலையும்
இருளுக்கும் ஒளிக்குமான வித்யாசம்
அகன்ற பரவளையம் மட்டுமே
என்பதை ஜீரணித்துக் கொண்டு
நிழல் உதிர்க்காத இம்மரத்திலிருந்து
உலர் கனிகளைக் கொய்து
கப்பறையை நிறைக்கின்றனர்

No comments: