Sunday, January 24, 2010

மாலதி கவிதைகள்

வலி
_____
யோசனைகளே முடிந்துபோன
வேலையில்லா அவஸ்தையில்

கடமைகளின் சிடுக்குகளில்

சக்களத்தி அறையின்
கிளுகிளுப்புகளில்

தூரங்களில் விலகிப்போன
ஈரங்களில் சமூக சோகங்களில்

போலி வேஷங்களில்
உடல் நலிவு அதிர்வுகளில்

காற்றுக்காய் நீருக்காய்
தேட்டைகளில்

பணவேட்டைகளில்

நல்லவரும் மிதித்து விட்ட
விபத்துகளில்

சுகம் நீ
வலிக்கூற்றின் அணுஅணுவே
நீ சுகம்

எலும்புக்குள் மஞ்ஞைக்குள்
சில்லிட்டு அறிவுத் திப்பிகளில்
புரையோடவிட்டு
வரும் வலியே நீ சுகம்.

பத்மாசனிக்கு
____________
பன்னீர்ப்பூ முற்றம் பரிசாய்க்
கிடைத்ததடி
மாநிலக்கல்லூரியின்
தாமரைக்குளம் பறந்து
காலில் குளிர்ந்ததடி
பார்த்தசாரதிப்பார்வை
பின்னடைந்த நரசிம்மர்
தீர்த்தம் தெறித்ததடி
வகைவகைப்பூச்சிற்றாடை
வாயில் துணிக்காற்றின்
அடிசில் நிறைந்ததடி
வாசல் அடைத்திருந்த
வயோதிக பிரும்மஹத்தி
ஓடி மறைந்ததடி
அன்பு தவிர தோழி!
அறியாத பருவத்தின்
அடையாள வடுப்போல
உன் கடிதம் கண்டவுடன்.
பன்னெடும் காலம்
பறி போன வசந்தம்
மீண்டு வந்தவுடன்.
இவளே இவளே யென்று
நீ அழைக்க வந்துவிட்டாய்
இனி யாரும் வேண்டாமடி
கண்ணின் கிணறுகளைத்
தூர்த்து விடலாமதில்
காணக்கிடைக்காதடி
துயரம்.
களிப்புத்திருநாட்களின்
உத்திரவாதம் சொல்லி
கடிதம் வந்ததடி உன்.
_____________________
காதல்
_______________
மனசின் ரத்தம் பாய்ந்து வரும்
உயிர்த்திசுவின் ஓலத்தில்
உடலாக...........
பிறப்பின் நாற்றம் வேர்வைமீற..
காலங்களின் பிசுக்கோடு
கவலைப்படும்
பெண்விரிசல்களைக்குழைத்துக்
கோட்டை கட்ட...
ஏதுவானபோதும்
அங்கு நீ இல்லை
என் முழு வாழ்க்கைத் துவர்ப்பில்
உப்பிட வந்த தேன் போலும்
உனையிழந்த என் ஊசிக்காதில்
என் துறவுகளின் நாணல் புதர்களைக்
காதலிக்கிறேன்.
__________________________________

வெற்றி
_______
உயிர் பறந்து பறந்து விசாரிக்கும்
உடலானதன் பொருளை
வழி கரந்து கரந்து மூடி
விழி கனக்கும் அந்தகாரத்தின்
பாரம் ஏந்தி
எப்பொதோ கனிந்த பழ வாசனை
இறுகிப் பாகாகி முறுகி இன்னும்
கருகும்.
வேண்டாதவனை இடைமறித்து
வியாபாரம் செய்யும்
பேரங்களின் சுயம்.
பொன்னேந்திப் பாதவடு
முரலும் வனங்களின் இசை.
புகழ்க்கூச்சல் காது பொத்தி
அழும் நெக்குருகி நெகிழ்ந்து
ஏதாகிலும் ஒரு சுரங்கத்தில்
ஒரு பாத்தியில்
ஒரு மீன் தொட்டியில்
அடிக்கடியாகும்
நிர்ப்பந்தத்தில்.
____________________________
காதோடு....
__________
எம்பிக்குதிக்கலாகும்படி
கூரை முட்டும் துள்ளல்
எனக்கு.
நீ மறந்து வைத்தாய்
அந்தத் தேதியை
சகல சமத்காரங்களுடனும்
கேட்கிறாய்
எந்தக்கிழமை வருகிறது
இந்த முறை என்று.
நான் சொல்ல மாட்டேன்
நீ மறந்தது எனக்குப்
பிடித்திருக்கிறது
இப்போது நெருங்கி விட்டோம்
நாம் என்று
என் அன்றாடக் குழந்தைகளைச்
சீராட்ட வருகிறது உனக்கு.
மொழியை உதறிக் கொஞ்சவும்.
குறுகுறுவென்கிறது எனக்கு
உன் மறதிக்கான நன்றிகளுடன்.
தேதிகளைக்குவித்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறோம் ?
குறித்துக்கொள்
மாம்பழ மாதத்தில் நான்
பிறந்தேன்
பின் அந்தத் தேதி எண்
இரண்டைக் கூட்டினால்
ஒன்றாகும்.
பிறகு அந்தத்தேதிகளில்
நான் அழுவேன்.
அப்புறம் சிவு சிவு என்று
கடல்களை அணிந்து
கணங்களோடு ஊஞ்சலாடித்
துடிதுடிப்பேன்
திரும்பத் திரும்பப் பிறக்க
வளர்ந்துன்னை மீண்டும் மீண்டும்
தகப்பனாக்க.

No comments: