Thursday, January 21, 2010

அருட்புலம்பல் - மகடூ முன்னிலையாக உள்ளது - பட்டினத்தார்


ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1

கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி 2

ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3

மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வெந்ததடி. 4

என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்;
தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5

எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெக் காறுமடி. 6

மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி !
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழக் கண்டேண்டி. 7

நீங்காப் புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8

மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி. 9

ஆத்துமத் தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி !
போற்றும்வகை யெப்படியோ போதமிழந் தானை. 10

வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி !
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே. 11

முன்று வகைக்கிளையு முப்பத் தறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவே ரறுத்தாண்டி. 12

குருவாகி வந்தானோ? குலமறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உருவழிக்க வந்தானோ? 13

கேடுவரு மென்றறியேன், கெடுமதிகண் டோற்றாமல்
பாடுவரு மென்றறியேன், பதியாண்டு இருந்தேண்டி. 14

எல்லாரும் பட்டகள மின்னிட மென்றறியேன்;
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி. 15

உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்,
அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள். 16

ஒக்க மடிந்ததடி ! ஊடுருவ வெந்ததடி !
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி. 17

தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி. 18

ஓங்காரங் கெட்டதடி, உள்ளதெல்லாம் போச்சுதடி
ஆங்காரங் கெட்டதடி, அடியோ டறுத்தாண்டி. 19

தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. 20

முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி. 21

என்னையே நானறிய இருவினையு மீடழித்துத்
தன்னை யறியத் தலமெனக்குச் சொன்னாண்டி. 22

தன்னை யறிந்தேண்டி ! தனிக்குமரி யானேண்டி !
தன்னந் தனியே தனியிருக்கும் பக்குவமோ. 23

வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி !
காட்டுக் கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம். 24

நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக் கேச்சலவோ? 25

இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி. 26

கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும். 27

என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே. 28

கங்குல்பக லற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி !
பங்க மழித்தாண்டி, பார்த்தானைப் பார்த்திருந்தேன். 29

சாதியிற் கூட்டுவாரோ? சாத்திரத்துக் குள்ளாமோ?
ஓதி யுணர்ந்தெல்லா முள்ளபடி யாச்சுதடி ! 30

என்னகுற்றஞ் செய்தேனோ? எல்லாரும் காணாமல்,
அன்னைசுற்ற மெல்லா மறியாரோ வம்புவியில்? 31

கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ? 32

சாதியிற் கூட்டுவரோ? சமயத்தோ ரெண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக் கிடமாச்சுதடி ! 33

கண்டார்க்குப் பெண்ணல்லவோ? காணார்க்கும் காமமடி
உண்டார்க ளுண்டதெலா மூணல்ல துண்பர்களோ? 34

கொண்டவர்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ? 35

பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டருளந் தோற்றி யடுங்குமதோ? 36

ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதமற எங்கும் விளங்கும் பெருமையன்காண். 37

வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண் !
நோக்க அரியவன்காண், நுண்ணியரில் நுண்ணியன்காண். 38

சொல்லுக் கடங்கான்காண் ! சொல்லிறந்து நின்றவன்காண் !
கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் ! 39

சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் !
ஏட்டி லெழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ? 40

சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா ! பொருளிதென வடைய விழுங்கினண்டி ! 41

பார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி !
கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி ! 42

மஞ்சனமாட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி ! 43

பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,
ஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி ! 44

மாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண் 45

அன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்
என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண் 46

சித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே 47

பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி !
ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி? 48


திருச்சிற்றம்பலம்

No comments: