Saturday, March 12, 2011

கவிதைகள் எஸ். தேன்மொழி

சமவெளியின் பாடல்

மதியப் பொழுதொன்றின் சாலைநிழலில் சயனித்திருக்கும்
என் தவறுகளைச் சேகரிக்க இயலவில்லை;
துறவி நண்டின் மீதேறும் கடற்சாமந்தி போல
வாழ்வின் சாயலடர்ந்தே பயணிக்கத் தொடங்குகையில்
ஆவியாகாத் திரவமொன்றின் தத்துவ வாசம்
மறதி துறந்த மனதைச் சிறுகயிறிட்டு இறுக்குகிறது;
வெந்து கரையத் தொடங்கும் மனத்துள்
உணர முடிகிறது வேள்வித் தீயின் தன்மையை
அலைபோடும் பாதை ஒன்றில் தொடரும் பயணம்
சமவெளிப் பூவின் அமைதியை உண்டு முடிக்கிறது;
சிலுவையில் உறையும் புன்னகையின் கண்ணீர்
தேவகுமாரனை உயிர்ப்பிக்கத் தொடங்கும் வேளை
வாழ்வின் நதிவரும் வெள்ளப்புனல்
கரைய மறுக்கும் தவறுகளால் எழுப்புகிறது
நிரம்ப மறுக்கும் தனிமையாலான அணைகளை.

No comments: