Sunday, March 13, 2011

கவிதைகள் அய்யப்ப மாதவன்

ஒற்றைக் கண் புலி

கொடூரமான
ஒற்றைக்கண் புலியின் வாயைத் திறக்கிறாள்
கடைவாய்ப் பற்களில் சதைத்துணுக்கு ஒட்டியிருக்கிறது
சுத்தப்படுத்தும் ஆர்வமின்றியே
புலிமீது பயணிக்கிறாள்

ஒரு கண்ணைக் குருடாக்கிய மானின்
கொம்புகளைப் புலித்தொண்டையில் பீறிடும்
ஜுவாலையில் தேடுகிறாள்
குரல்வளையில் ஓட்டையிட்டு துர்சத்தங்களை
விஷமேற்றித் துப்பச் செய்கிறாள்

விஷம் பரவிய இதயத்தைத் தாங்கிக்கொண்டு
காட்டின் முள்பாதை வழியே
இயக்கம்
தடுமாறிச் சரிகிறது மான்
சரியும் உடல் கண்டு
புலியின் ஒற்றைக் கண்ணைத் திறந்து விரிக்கிறாள்

வேட்கை பலித்துவிட்டதாக வாய்பிளந்து
காடு அதிரச் சிரிக்கிறாள்
மீதமான சடலத்தின் அருகில்
ஓர் ஓநாயையும் விட்டுச் செல்கிறாள்
கோபம் தணியாமல்

புலிமீது ஏறி வருபவள் அதனை விடுத்து
பெரும் புன்னகையுடன்
பிணத்தை உண்ணும் ஓநாயை
உச்சி முகர்ந்து செல்கிறாள்

l

தூண்டில்காரன்

ஓய்ந்துபோன நீரிலிருந்து
ஒரு மீனைக் கண்டெடுக்கிறேன்
மணல் வெளியெங்கும்
செதில்கள் தேய்ந்து உதிர்கின்றன
கரையில் ரத்த வாடையோடு
மீனின் உடல்
தூண்டிலோடு வந்தவன்
கைகளில் பிடித்துவிடுகிறான்
அவனைத் துரத்துகிறேன்
திடுமெனத் தோன்றிய கடலில்
மீனை விட்டெறிகிறான்
செதிலுடைந்த மீன்
நீரெல்லாம் பெரிதாகி அலைகிறது
கரையிலிருந்து நான்
அலைகளுக்குள் ஓடுகிறேன்
அலை அலையாய் என்னுடல் மாற
என்மீது நீந்துகிறது மீன்
அவன் மறுகரையிலிருந்து
கையசைக்கிறான் கேலிச் சிரிப்புடன்.

l

36ஆம் மாடி

ஒரு மாய நிழல் நான்
நகரத்தின் நிலத்தின் மீது
அலையலையாக அலைகிறேன்
ததும்பும் நுரையில்
மணல் துகளாக உடைந்துபோகிறேன்
இருளின் வாயில்
உருவமிழந்து முனகுகிறேன்
நெறிக்கும் விதியை நினைத்து

விடியும் பகலிலிருந்து
நெருப்புத் துண்டாக
பேரண்டத்தின் இமைகள் விரிகின்றன

அழகிய மலர் வாசனையுடன்
அறைக்குள்ளிருந்து விடுபட்டு
கழுகுகளிடையே நடக்கிறேன்

உருளும் தலைக்குள் கொத்திய இடத்தில்
தீபம் ஏற்றுகிற சாத்தான்களிடமிருந்து
குற்றச்சாட்டுகள் குவிகின்றன

பற்பல சாலைகள் புகழ் பெற்ற இடங்களென
ஆகிவிட
உடலில் கதறிக்கொண்டு
விலகப் பார்க்கிறது
நானாகிய மாய நிழல்
வேறு போக்கிடமின்றி
நகரின் 36ஆம் மாடியொன்றின்
விளிம்பில் நின்று கண்காணிக்கிறேன்
ஸ்தம்பிக்கவைக்க.

l

பனிப்பெண்

செயற்கையாய் உறைந்த பனிக்கட்டிகளில்
அவளைச் செதுக்குகிறேன் மிகுந்த ரசனையுடன்
கண்ணாடி தேகத்தில்
அவள் இதயத்தை வடிவமைத்தேன்
என் ரத்தத்துளிகளைப் பனிச்சிலைமீது தெளித்தேன்
சிவப்பான இதயத்தில் துடிப்புகள்
மெல்லக் கட்டியணைத்து உதடுகளைக் கடிக்கிறேன்
பனித்துளிகள் என்மீது பரவுகின்றன
வெள்ளை உடலென மாறுகிறேன்
பனிப்பனியாய் உறைய உறைய
சிலையாகிறேன்
அதிர்ந்தவள் என்மீது நெருப்பாக அலைகிறாள்
பனிக்கட்டிகள் உருகிக் கரைந்து
பெரும் நதி
நகரின் பனிக்கட்டிகளை உடைத்தோடுகிறது
மீண்டு எழுந்ததும் அவளுடன் உரையாடுகிறேன்
உரிய காதலுடன்
ஓர் இரவு அவளுடன் கடுங்குளிரில்
பனியோடு பனியாய் இறுகிக்கிடக்கிறேன்
அதிகாலை ஒளியில்
படுத்திருந்தவளிடத்தில் நான் கொடுத்த
ரத்ததுளிகள் மட்டும் தேங்கியிருக்கின்றன
குளிர்காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

l

கரை மீன்

இரவின் கசிவிலிருந்து வந்தவள்
முத்தமிடப்படாத என் விரல்களை முத்தமிடுகிறாள்
இவள் வார்த்தைகள் நாண வைக்கின்றன
விரல்களில் விரல்களால் மேனியின்
இமை திறக்கிறாள்
உதடுகள் வழியே சிதறுகின்றன
அவன்மீது நட்சத்திரங்கள்
ஈரத்துடன்
கடல் தேடிய கரை மீன்
துள்ளித் துள்ளித் தாகத்தின் வெறியில்
நீர் பருகி
நீந்துகின்றது மேனியில்
மௌனப் பெரும் மழையில்
காற்றில் மறைகின்றன குடைகள்
அவள் குரல்வளையில் அதிரும் நரம்புகளில்
பதறும் இசை
பேரிசையில் அயர்ந்து தூங்கும்
இரவு.

l

வல்லூறுகளை அழைப்பவன்

சப்பணம் போட்டு உட்கார்ந்து
குரல்வளையிலிருந்து வல்லூறுகளை அழைக்கிறான்
கூட்டம் கூட்டமாக
அவனை வட்டமிடுகின்றன
இரை கிடைக்கும் ஆவலில்

இது வரையிலும் எந்த இறைச்சியையும்
வழங்கியதில்லை
ஆத்திரமடைந்த வல்லூறுகள்
கண்ணாடி ஜன்னல்களின் மீது விழுகின்றன

மொழி தெரிந்தவன்
கண்ணாடியில் மோதிச் சரியும்
அந்தப் பெரும் பறவையை
தற்பெருமையுடன் பார்க்கிறான்

தொண்டைக்குள் வளர்த்துவைத்திருக்கும்
குரல் வித்தையில்
அவனிடம் அந்த மலைநகரமே
நடுங்குகிறது

அவனுக்கு எதுவும் தர
யாராவது மறுக்கிறபோது
அவர்கள்மீது வல்லூறுகளை
கொத்தவிடுவதாகப் பயத்தை விதைக்கிறான்

பயந்தவர்கள்
வல்லூறுகளைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனிடம்
இறைச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.

l

சிவந்த கடல்

கடல் வெளியில் நடக்கிறேன்
சுற்றிய நரம்பு வலைகளுக்குள்
மிருதுவான உடல்

களைத்துறங்கும் இரவுகளில்
கெட்ட கனவுத் தசைகளை
பல மீன்கள் கவ்வுகின்றன
உதறி எடுத்துக் கைகளை அசைக்க முயல்கிறேன்
யாரோ ஒருவன் அதனை
வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டிருக்கிறான்
இருந்த இடததிலேயே உழல்கிறேன்
காயம்பட்ட புண்ணிலிருந்து ரத்தம் கசிகிறது
சிவந்த கடலலையில் ரத்தக் கவிச்சி
பெருத்த உடல் தளர்த்துகிறது
படபடப்பு குறைந்த இதயம்
சாவுக்குக் காத்திருந்தவர்கள் துரத்தி வருகின்றனர்
தாரை தப்பட்டையுடன்
கண்கள் இருட்டிக் கடல் வெளி மறைகிறது
சிதிலமான உடலில்
மூடாத கண்களுடன்
ஆழ்ந்த நித்திரையில்
ஈட்டியுடன் வருகிறாள்
வாய் மூடிக் கதறுகிறேன்.

No comments: