Saturday, March 12, 2011

கவிதைகள் பொ. செந்திலரசு

தனியனாய் அலையும் கடவுள்

சுவரில் விரிந்த நாட்காட்டி மைதானத்தில்
பெரு வனமொன்றை விதைக்கின்றேன்.
அடர் மௌனத்தைச் சப்தித்தபடி
துளிரும் மரங்களிலிருந்து
பழுத்த இலையென உதிர்கின்றன
நாட்கள்.
வனம் இயக்கமுற
மனிதனிலிருந்து கடவுளையும்
கடவுளிலிலிருந்து மனிதனையும்
வனைகிறேன்.
வனத்தினிடையோடும் சிறுநதியில்
மனிதனிலிருந்த கடவுள்
குளித்துக் குதூகலிக்க,
புனல் விளையாட்டின் பின்பாதியில்
கடவுளிலிலிருந்த மனிதன்
அகோரப் பசியுடன்
தன் வேட்டையைத் துவக்குகிறான்.
முதுகில் புதையும் அம்புகளோடு
நாட்களின் சருகுகளில்
சலசலத்து வீழுகின்றன
அமைதியும் கருணையும்.
பெரு ரணத்துடன்
புறமுதுகிட்டோ டும் காலத்தினைத்
துரத்தியபடி
வனத்திலிருந்தவன் வெளியேறத்
தேடிக் கண்டெடுத்து
விலக்கப்பட்ட கனியைப் புசித்தபடி
கானகச் சுவரில்
தனியனாய் அலைகிறான்
மனிதனிலிருந்த கடவுள்.
உதிர்ந்த நாட்களின் வடுக்களோடு
ஆண்டுகளைப்
பதியனிட்டுக்கொள்கிறது வனம்.

No comments: