Saturday, March 12, 2011

கவிதைகள் ஞானக்கூத்தன்

இன்னுமொரு புத்தகம்

எனக்குத் தெரியாதா என்ன
என் புத்தகத்தை உனக்குப்
பிடிக்காதென்று?
புத்தகத்தின் அட்டைப் படத்தில்
இருக்கும் வேழத்தைத்
துரத்திவிட ஆட்களை அனுப்பினாய்
அவர்கள் வேழத்தின் தந்தங்களைப்
பறித்துக்கொண்டு வேழத்தை உயிருடன்
விட்டுவிட்டார்கள். நிருபர்கள்
ரத்தம் கோரும் வேழத்தின் வாயைப்
படம்பிடித்துக் கொண்டுபோனார்கள்.
அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த
மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த
பறவைகளைச் சுட்டுவிடும்படி நீதான்
வேடர்களை அனுப்பினாய்.
அவர்கள் குறிதவறிச் சுட்டார்கள். அவர்கள்
இறகுகளை உன்னிடம் காட்டிக்
கூலி பெற்றுக்கொண்டார்கள்
புத்தகத்தின் அட்சரங்களை ஓடும்படி செய்ய
அவற்றின்மேல் நீதான் டீசல் ஊற்றினாய்
எனது காயங்கள் ஆறிவருகின்றன.
எனது புத்தகத்தின் அட்டையில் இப்போது
கிம்புருஷன் ஒருவன் காட்சி அளிக்கிறான்

தூக்கத்தில் அழுகை

தூக்கத்தில் குழந்தை அழுகிறது.
தொலைக்காட்சியில் திரைப்படம்: எல்லோரும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜட்டி மட்டும் அணிந்த பெண்ணின் சடலத்தைக்
காட்டுகிறார்கள். ஓவென்று திரைப்படப்
பாத்திரங்கள் கதறுகின்றன.
தூக்கத்தில் வீட்டுக் குழந்தை அழுகிறது.
கனவுக்கான தேவதை காட்டுகிறாள்:
தொடக்கப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, கல்லூரி
மற்றும் அவற்றின் ஆசிரியர்களை.
படித்து மறக்கப்போகும் பாடங்கள் பற்றிய
வினாத்தாள்களை
போலித் தராசு தொங்கும் ரேஷன் கடைகளை
நாய்கள் துரத்தும் தெருக்களை.
தெருவை அடைத்துக் கனவில் உள்ள பசுக்களை.
டூ விலர் ரௌடிகளை?
ஆறு மணிக்குத் திறக்கப்போகும்
மதுக்கடையின் முன்பு காலை ஐந்துக்கே
காத்துக் கிடக்கும் முன்னிரவுக் குடிகாரர்களை.
நம்பர் இல்லாத தெருச்சாலையில்
எரியும் பேருந்துகளை?
ஊராட்சித் தேர்தல் சாவடிகளை?
பாம்குரோவில் பிறந்தநாள் கொண்டாடும்
பட்டிமன்றப் பேச்சாளர்களை?
தூக்கத்தில் குழந்தை அழுகிறது
யாருக்கும் தெரியவில்லை ஏனென்று
எனக்குத் தெரியும். நான் ஏன் சொல்கிறேன்.

No comments: