Saturday, March 12, 2011

கவிதைகள் அய்யப்ப மாதவன்

கவிதைகள்
அய்யப்ப மாதவன்
அவனுக்கு மழைக்கோட்டை அணிவித்தேன்
நனைந்துவிட்ட காகம்
என்னைப் பார்ப்பதாயிருந்தது
தலையை மூடும் தொப்பியில்
இழுத்துக் கட்டப்படும் நூல் ஒரு பக்கம்
அறுந்தே இருந்தது
அது அவனைத் தொந்தரவு செய்திருக்கும்
அது என் தொப்பி என்பதால்
உறுதியாகச் சொல்ல முடியும்
எதுவுமில்லாத காகங்கள்
முழுக்க நனைந்துவிடுவதைத் தவிர
எதுவும் தெரிவதில்லை
நானோ அவனோ
நீர் உள்ளிறங்கும் கோட்டையோ
நூலறுந்த தொப்பியையோ அணிந்து
அவதியுறுகிறோம்
பகுத்தறிந்து
பாழாய்ப்போகிறோம்
வேறென்ன

l

பெனீட்டாவின் கையில் ஓர் அழகிய அட்டைப்பெட்டி இருந்தது
அதை ஒரு குழந்தையைப் போலத் தாங்கியிருந்தாள்
மழை கொட்ட
நனையாதவாறு சுவர்களிடமிருந்தாள்
பலத்த காற்று வேறு
கண்களில் பயத்தினழகு
மழையையும் சூறைக்காற்றையும்
சபிப்பவள்போல் பார்த்துக்கொண்டிருந்தாள்
கையிலிருந்த பெட்டி நடுங்கியது
ஜன்னல்கள் படீர்படீரென
அடித்து மூடிக்கொண்டன
அருகிலொருவன் பெட்டியின்
நடுக்கத்தைக் கண்டான்
சாரல்
காற்றோடு வந்து விழுந்தது அங்கு
அவளுக்குள் தூரிகைகள்
மழைக்காட்சியினைத் தீட்டின
மேலும் மரங்களின் பெரும் அசைவை
உலகத்தின் பீதியை
அவள் கண்களின் பதற்றத்தை
அருகிலிருப்பவனின் பெட்டியின் மீதான கவனிப்பை
பெட்டியின் உயிர்த் துடிப்பை
மழை தூறலாய் சாரலாய்
காற்று இலைகளில் பதுங்கிக்கொண்டது
துள்ளிக் குதிக்கும் பெட்டியுடன்
வெட்ட வெளிக்குள் நடந்தாள்
மரமொன்றின் இருளிலிருந்து
பெரிய அணிலொன்று பெட்டியை
ஏக்கத்துடன் பார்த்தது

l

வௌவால்கள் அடைந்த கோயிலில்
சடைமுடியுடன் கறைப்பற்கள் தெரியப்
புன்னகைத்துக்கொண்டு நிற்கும்
முடி முளைத்த நிர்வாண மனிதனின்
உள்வெளியில் வௌவால்கள் பறக்கின்றன
பயமற்று அவற்றைப் பிடித்துத் தடவிக்கொடுக்க
வட்டமிடுகின்றன
இரை தேடித் தந்து ஊட்டிவிட
உடல் பெருக்கும் வௌவால்கள்
உடல் தின்னப் பழகுகின்றன
தின்னத் தின்னச் சதைகள் மறைகின்றன
எலும்புக் கூடாகி
கடவுளின் சந்நிதானத்தில் கிடக்க
நிர்வாணம் ஒழிந்தது
இருண்ட கோயிலின் கடவுள்
கண்கள் மட்கிப்போய்க் கிடக்கிறார்
எலும்பைத் தின்ன முடியாமல்
கடவுளின் கற்சிலையைக் கடிக்கத் தொடங்குகின்றன
வௌவால்கள்
கோபப்படாத கடவுள் சிவனே என்றிருக்கிறார்
ஓர் நாள் கற்சிலை கரைந்த கருவறையின்
வௌவால்கள்
கடவுளாயின எம் மக்களுக்கு

l

இந்நேரம் அனைவரும் எதாவது
செய்துகொண்டிருக்க வேண்டும்
நான் வெவ்வேறு உருண்டை வடிவங்களில்
திராட்சை என்ற பெயர்கொண்ட
பழங்களைச் சாப்பிடுகிறேன்
சொல்லமுடியாத சுவைக்குள்
என் மயக்க நிலை
உவர்ப்பான அதன் மேல்பகுதியைத் துப்புகிறேன்
மீண்டும் கொடிகளாகும் தன்மையுள்ள விதைகளுடன்
எதிரான இருவர் அந்தப் பழங்களைக்
கொடியிலிருந்து பிடுங்கும் சத்தத்தில் அவர்களின்
நாக்கின் சுவை நரம்பைக் கேட்கிறேன்
பழங்கள் குறைந்துவருகின்றன
பழமற்ற பொழுதில்
அவர்களைப் பழங்களாக்கிவிடுவேன்
இருவரும் இரவின் கண்களில்
இமைகளின்
துடிப்பாகிவிடுவார்கள்
விரல் நீண்டு பழமானவர்களைப்
பிடிக்கப் பார்க்கையில்
இரவின் கறுப்பாகி
என் கண்களை இருளாக்கிவிடுவார்கள்
மூளைக்குள் உருண்டோ டும் அவர்களைத்
துரத்திக்கொண்டிருப்பேன்
விடியும்வரை

No comments: