Saturday, March 12, 2011

கவிதைகள் கவிதா

ஆன்மாவை இசைக்கும் கலைஞன்

நட்சத்திரங்களற்ற இந்த இரவில்
என் அடர்ந்த வனங்கள்மீது
அவனது இசை
ஒரு மாயவித்தையை
நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

அவன் இசையின் சில
அதிர்வுகளில்
காலத்தின் அதிகாரங்கள்
பிறழ்வுகொள்கின்றன.

அவனது இசையிலிருந்து மீளும்
ஆசுவாசத்தை
என் இரவுகளுக்கும்
ஒளியை
என் பகல்களுக்கும்
அவன் தந்துகொண்டிருக்கிறான்.

பின்ஜாம வேளைகளில்
எனக்காக மட்டுமே
அவன் இசைத்துக்
கொண்டிருப்பது
யாருமறியாதிருந்த என்
தனிமையின் ஆழங்களை;
யாருக்கும் காண்பிக்கப்படாத
என் ரகசிய துயரங்களை;
வாழ்வு தின்றுகொண்டிருக்கும்
என் மென்கனவின் மௌனங்களை

நிச்சலனமான இந்தப் பொழுதின் மீது
அவன் விரல்களிலிருந்து அவன் கசியவிட்டுக்
கொண்டிருப்பது
என் ஆன்மாவை.

n

தம்மை நிகழ்த்திக்கொள்ள
ஒரு களம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றன
என் யுத்தங்கள்.

போர் முரசுகளின் பெரும் ஒலிகளுக்கிடையில்
நிலவும் சிறு அமைதிகளுக்குப்
பழகிவிட்ட களம்,
யுத்தங்களிடமிருந்து தன்னை
ஒளித்துக்கொள்கிறது.

கொடும்பூதங்களென யுத்தங்கள் வளரும்போது
தன்னை மேலும் சுருக்கிக்கொண்டு
கூடுதல் எச்சரிக்கைகளோடு
மறைவிடங்களைப் பாதுகாத்துக்கொள்கிறது
களம்.

இறுதியில்
என் யுத்தங்கள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன.

களங்களுக்கு எப்படியோ தெரிகின்றன
யுத்தங்களின்
ரகசிய வலிகள்.

No comments: