Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி

விஞ்ஞான ஆசிரியர்

மழையோடுதான் விடிகிறது காலைப்பொழுது
நான் குளிக்குமுன்னமே தான் குளித்த பூமரங்கள்
பள்ளிக்கு வந்திருக்கும் சிறுமிகள்
பெரிய வாத்தியார்
மாமரம்
புற்கள்
சின்ன வகுப்புப் பிள்ளைகள்
என் வாசல் ஒரு பள்ளிக்கூடமாக
உதவி செய்த காலைமழை
இன்னும் வாழ வேண்டும்
நாளையும் வர வேண்டும்
என் வாசலில் மரங்களின் கல்வி ஓங்கி
கனிய வேண்டும்
பூமரத்தின் முகங்களெல்லாம் புன்னகைகள்
அவைகளுக்கு
பிடித்த பாடம் நடக்கிறது
குளிர்
என் போர்வையை அவைகளுக்கு
நான் தரத் தேவையில்லை
பாடம் ஏறாது
வெயில் வருகிறது
நிலத்தை உலர்த்துதல் பற்றி
இருட்டை விரட்டியடித்து
தலையை எப்படி நிமிர்த்துதல் என்று
பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க
வெயில் வருகிறது
வெயில் விஞ்ஞான ஆசிரியர்.

ஒரு கூடைக் கற்பனையின் துளிர்

பேருந்தின்
தலை வயிறு வால் முழுக்க
இரை
சமியாமல் - ஒரு வாந்தி எடுத்தால் நல்லதென்று
நினைக்கின்ற நாலு சக்கரத்துக் கழுதை
ஒரு பழைய எருமை
எரிபொருளாய் வைக்கோல் தின்கிறதோ என்று
நான் கற்பனையின் துளிர் நோண்ட
போகிறதா இல்லை போவதைப் போல் போவதைப் போல்
சமாதி ஆகிறதா
ஓரிடத்தில் நின்று
சிறுநீர் கழித்ததைப் போல்
ஒரு பையன்
இரு சிறுமி
தாயோடு
இன்னுமொரு
கிழவியென
ஐவர் இறங்கிவிட
இரு வணிகர்
இவர்கள்
இருவரது கரங்களிலும்
இரு பொதிகள் என
திரும்ப
சாப்பிட்ட மாடு உறுமியது
நான் நோண்டிக் குவித்த
கற்பனையின் துளிர்கள்
ஒரு கூடையாகி
வெறும் கையாய் பேருந்தில்
ஏறி இருந்த நான்
என் இடம் வந்து
இடத்தில்
என்னை வரவேற்கும்
மரம் வந்து
அதிலே
யாரோ கூர் ஆயுதத்தால்
எழுதிவைத்த
சமகாலத்து
ஊர்க் காதல் பட்சிகளின்
நாமங்கள் புலப்பட
உள்ளம் குளிர்ந்தது மாதிரித்தான் இருந்தது
இறங்கும்போது பெரிய சுமை
நான் காதலிக்கும் கவிதைப் பெண்ணுக்குக் கொடுக்கலாம்
வெள்ளைக் காகிதங்களில் அவள் சுமந்து திரிவாள்
கை சோராமல்
பெரிய பலசாலியாக அவள் இருப்பதனால்.

No comments: