Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள்- பெண்ணியா

மழை

எந்த ஒரு உரையாடலும்
இல்லாத இடைவெளி
நிசப்தத்தில் உறைகிறது.
இடத்தில் இருந்தவாறே
உணர்வெழும்பி
வேறு இடம் துளாவுகிறது.
வெற்று இடைவெளியில்
எதுவும் இல்லாதபடியால்
உரிய உருவம் ஒன்றினை
அங்கு நிரப்பிக்கொள்ளுதல்
காற்றுக்கு சாத்தியமானது.
அந்தரங்கம் பேணத் தெரியா
இரவிலிருந்து
பகல் ஒளியைத் தேடிக்கொள்வது
பிரகாசம் நிறைந்த சூரியனுக்கு
சாத்தியம் ஆனதே.
குளிர்ந்த உடலைத் தழுவியபடி
எனக்கே உரிய மழை
என்னையே வந்து சேரும்.
என் பாதங்களைக் கழுவ
என்னைத் தழுவிக்கொள்ள
என்னைப் போர்த்திக்கொள்ள
நான் நடக்கின்ற வீதியெங்கும்
சிதறிக் கிடக்க
மழை
போதுமானது எனக்கு.

நீ என் நண்பனாகிறாய்

இருளில் மின்னியபடி
தகதகக்கின்ற ஆறு
பச்சையாய் விரிந்திருக்கும்
பெரிய நிலம்
என் முன்னால்
2 கோப்பை சூடான தேநீர்
எல்லாவற்றிற்கும் மேலாய்
எனக்கு எப்போதும் பிடித்த நீ
காலம் கடந்த பின்னான சந்திப்பில்
நீ என் நண்பனாகிறாய்.
முகங்கள் மாற்றப்பட்டுவிட்டன
பழைய நாட்குறிப்பில்
இடையிடையே சொருகப்பட்ட
உனது பெயர்
படிக்க இயலாத இடங்களாய்
மறைக்கப்பட்டுவிட்டன.
எப்போதோ ஒருமுறை
இதே இடத்தில்
முதல்முறையாய்
உனது காதலை
கண்களைத் தாழ்த்தியபடி
நீ சொல்லிக்கொண்டிருந்ததாய் ஞாபகம்.
அப்போதும் ஆறு
இருளில் மின்னிக்கொண்டிருந்தது.
மேகம் அதிகமதிகம் கறுத்து
நீரைக் கொட்டுகிறது.
எழுந்து செல்ல மனமின்றியே
நீயும் நானும்
ஏதோ நடக்கின்ற ஒன்றை
பார்ப்பதுபோல்
இருக்கையில்
தளர்ந்துபோய்க் கிடக்கிறோம்.
நடந்துவிடாத நல்லவை பற்றி
என்னைப் போல் நீயும்
கண்டுகொள்ளாத படியால்
காலம் கடந்த பின்னான சந்திப்பில்
நீ என் நண்பனாகிறாய்.

பயணம்

பயணத்தின் முகம் நெடுகிலும்
மரமும் மனிதர்களும்
ஆக்கிரமிக்க
வழிகின்ற வியர்வையை
மழித்தபடி
பயணம் தொடர்கிறது . . .
மீதமிருக்கின்ற வாழ்வை
உணர்த்தியபடி
சடசடக்கின்றன -
சாலையோரத்தின்
பொலித்தீன் பைகளும் மீதக்கழிவுகளும் . . .
உறங்கிக்கொண்டிருக்கும்
எதிர்காலத்தின் கதவுகளை
உலுக்கிவிட்டுக் கடக்கிறது -
வாகனத்தினதோ அல்லது
பாதையினதோ ஏதோவொரு தடவல்.
கேட்டுக்கொண்டே இருக்கின்ற
கூச்சல்களின் மத்தியிலும்
கண் மூடியபடி
உறங்கிக்கொண்டே வருகின்றன
உடலின் வெளிப்புறத்தே உள்ள
கண்கள் இரண்டும்.

No comments: