Saturday, March 12, 2011

கவிதைகள் க. அம்சப்ரியா

யாரோ தொலைத்துவிட்ட நள்ளிரவொன்று
சுற்றியலைகிறது வழி அறியாமல்
வழிப்படுத்துவதாக அழைத்துச் சென்ற நிலா
நடு ஆற்றில் மூழ்கடித்து
ஏதுமறியாததுபோல் கரையேறிப் போகிறது.
சொட்டச் சொட்ட நனைந்த இரவை
காடு வரவேற்று உட்கார்த்தியது.
அடர்ந்த மரங்களின் இரைச்சலில்
மனம் பேதலித்த இரவு
மலையுச்சியிலிருந்து குதித்து
தன்னை மாய்த்துக்கொண்டதை
தூரத்திலிருந்து கண்ணீரோடு
பார்த்துக்கொண்டிருந்தன பறவைகள்
அது இனி ஆவியாக
சுற்றியலைவதை விழித்திருப்பவர்கள் பார்க்கக்கூடும்
உறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு
நேர்வதில்லை இம்மாதிரி அபத்தம் எதுவும்!

No comments: