Saturday, March 12, 2011

கவிதைகள் க. மோகனரங்கன்

உறங்காப் பத்து


'சுந்தர ராமசாமி - 75' போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

1

என்
கண்ணும் கருத்தும்
கூடிக் குறித்து நிற்க
குறுகத் தரித்த வுன்
சிறு தனங்களிலும்
பெருந் தக்கது
பிறி தொன்றறியேன்
பெண் திருவே!
பித்தூறிப்
பீதிக் கனவுகள் பெருகிக்
கனத்த யென்
மத்தகம் குத்தியடக்கும்
அங்குசமும்
அவையே யென
அறிந்து
ஐம்புலனும்
அவிந் தொடுங்கி நின்றேன்
என் தேவே!

2

ஏதிலார் போல்
நோக்கும் தொழில்
ஒழித்து
விருப்போடுன்
விழிவிளை நிலம்
பார்த்திருந்தேன்
காத்திருந்த நொடிகள்
கல்லாகி உறைய
கடுத்த வதனத்தில்
கனிவேது மில்லை
விட்டு விலகி நிற்கவும்
விதி கூடவில்லை
மத்திடைப் பட்ட தயிராய்
புத்தியில் நினைவுகள் திரிபட
பரந்து கெடும்
இவ்வுலகியற்றி யானும்
அளவறியான்
கரவுற்ற நெஞ்சின் நோவு.

3

கற்றும் தேறா
கடையேன் யென்னை
கருணை சற்றுமின்றி
சுற்றி இறுக்கிடும்
முன் வினைப் புரியது
இற்று வீழாதோ யென
ஏங்கியே
என் தேவியே!
உன் பதமிரண்டினையும்
பற்றிச் சரணடைந்தேன்!
நினைவுள் பொத்திவைத்து
நிதமும் பத்தி செய்தேன்
கல்லாப் பிழையும்
கருதாப் பிழையுமென
எளியேன் கணக்கில்
இதுமட்டும் கூடிய
எல்லாப் பிழைகளையும்
இட்டு எரித்தாற் போல
சிவந்து கனலுமந்த
செவ்வடிகளில்
முகம் புதைத்தேன்
முத்த மிட்டேன்
உன்மத்த களி கொண்டு
உயிரார அவற்றிற்கு
ஊழியம் செய்வித்தேன்

4

அரவமேது மின்றி
ஊர் உறங்கும்
யாமத்திலும்,
கண் கொள்ள முடியா
கனவுகள் ஆழத்தில் நீந்த
விழித்திருக்கும்
என் மனம்
புழுவேறிய
தூண்டில் முள்ளென
உன் நினைவு மிதக்கும்
துன்பக் கேணியடி

5

இமை தாழும்
உனது கண்நோக்கு
என்றேனும்
எனைக் களவு கொள்ளுமென
நடைவழி நின்றேன்
'உள்ளமனக் குரங்காட்டித் திரியுமென்
உளவறிந்து'*
ஏறிட்ட
உனது புருவங்களினடியில்
பளபளத்த பார்வை
மின் வெட்டிப் போக
அடிவயிறு
கிழிபட்டுத் தொங்கிய
குலை ஈரலின்றும்
பீறிட்டு வழிந்தது
நாறும் மஞ்சள் திரவமாய்
நின் மெலிந்த தேகத்தை
கரந்த காமம்

6

மிகுதிக் கண்
மேற்சென்று
இடித்துரைக்கச் செய்யாது
நகுதற் பொருட்டென்றே யென்னை
நட்புச் செய்த
நல்லோர் பலரும் கூடி
வியந்து நோக்க
பித்தம் வடிந்து
பிரமை கலைந்து
பேதலித்த புத்தி
நலுங்காமல்
நடுநிற்க
நாளும் துதிக்கிறேன்
மண் நீர் தீ வளி வானென
அனைத்துமாகி நிற்கும்
போதப் பொருளே என் பூரணமே!

7

கண் தொட எட்டி
கைபட எட்டாது
நழுவும்
உனதுடலை
உச்சரிக்கத் தித்திக்கு மொரு
சொல்லாக்கி
உள்ளுக்கு முள்ளே
கிடத்தினேன்
உருவேறத்
திருவாகிய அச் சொல்
திறந்தேகிய
உருவங்கள் ஓராயிரம்
உன் தீராச் சாயல்களில்
சூழ்ந் தென்னை
ஆரத் தழுவியே ஆலிங்கனம் செய்திட
உடல் கொள்ளாது
உயிர் கொதிக்கும்
கடிவாளம் உதறிய
குருதியின் குளம்புகள்
நாளங்களில்
பாயும்
தலை கீழாக

8

ஓயாது துடிக்கும்
நாடிக்கும் நடுவே
யாதிட்டும் நிறையாத
ஊசி முனைப் பள்ளம்
ஒன்றிருந்து
வாதிக்கும் உயிரை
வழியும்
புறங்கழுத்தின்
கூந்தல் பற்றிக்
குனிந்து வுன்
உச்சி முகர்ந்து
உடல் மணம் தேடி உள்ளிழுக்க
நிறையுமப் பள்ளமென
நினைத்து
கூடுபிரிந்தே
மேவி யெழுந்த என் ஆவியுனை
கூடி முயங்கிய கோலமும் கோணமும்
கூற வாய் துணியேன்!

9

அந்தி தொறும்
ஒளியணைந்து பிறக்கும்
அரையிருளில்
இரை தேடி
மறைவிடம் விட்டு வரும்
விஷ நினைவுகள்
தம் பிளவுண்ட நா நீட்டித்
தொடப் பரவும் அம் மயக்கம்
சருமத் துளை தொறும்
உருகிக் கசிந்த
உயிர்த் தைலம் பற்றி
உந்திச் சுழியில் மூண்ட
தீ
திசுக்கள் ஒவ்வொன்றையும்
தின்று எரிய
வெந்தடங்கியது
எலும்பும் நரம்பும் கூடி
சதை கொண்டு எழுந்தாடிய
விரகம்
கலைந்த படுக்கையில்
நிசி முழுவதும் சுடலை காத்து
விடியவும்
எஞ்சிய சாம்பலை
நுதலில் நீறெனப் பூசி
எழுவாய் காளீ!

10

முன்னைப் பேற்றின் தவத்தால்
என்னை யின்று யிங்கு
ஆட் கொண்டாய்
எண்ணம் போல்
ஆட்டு வித்தாய்
பின்னைப் பிறவிகளுக்கும்
உன்னையே தொழுதேத்தும் பித்தனாய்
உளம் பேதுறச் செய்தாய்
முடிவுறா நடனம் புரிவாய்
'அன்னை! அன்னை!
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.!' #

# பாரதியார்

No comments: