Sunday, March 13, 2011

கவிதைகள் இளம்பிறை

இரவில் பதுங்கும் பறவை



விரிந்து கிடக்கிறது இரவு
கூரிய முட்களாக
கழிவிரக்கக் கண்ணீரில் மிதக்கும்
மெலிந்த நினைவுகளை
சுகத்திலாழ்ந்த தவிப்புகள் பெருகி
மூழ்கடித்து
முள்ளாய் இரவில்
கிடத்துகின்றன மீண்டும்.
எரிவது பொறுக்காது
எங்கோ சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும்
நதியில் நனைவதற்கான ஓட்டம்
கல்லாக்கி எறியப்பட்ட
நேசங்களில் இடறி
குருதியொழுகச் சாய்ந்து கிடக்கின்றன.
புதிதாக
ஒரு விருப்பத்தைத் தொடர்வதென்பது
ஒரு துயரத்தைத் தொடர்வதாவதால்
கீறல் வலிகளுக்கஞ்சி
அடர்ந்த மரக்கிளையொன்றில்
இரவுதோறும் பறவையாகி
அமர்ந்துகொள்ளும் ஞாபகங்களை
விருப்பமற்ற மகளைத்
திருப்பியனுப்பும் தாயாக
உடலில் சேர்ப்பித்துச் செல்கிறதிந்தக்
குளிர்ந்த அதிகாலை.

No comments: