Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள் - சலனி

கண்ணாடிப் பாம்புகள்

மிக இங்கிதமாய்
என் அடையாளம் குறித்து
பேசுகிறாய்
பயங்கரமான
வேற்று முனகலுடன்
மெத்தைகளில் நான் புரள்வதாய்
நெடும் இரவை
விழித்துக் கழிக்கிறாய்
காலைகளிலும்
மூடாத குளியலிலும்
முழங்கால்களை மறைக்காத
காலை உணவிலும்
துருத்திய முலைகளிலும்
என் தாசித்தனம் உன்
விழிகளால் ஒட்டப்படுகிறது.
மீண்டும் மீண்டும்
முந்தானையைச் சரித்த
உன் உள்ளாடைக் களைவுதான்
புரியாமலேயே தொக்குகிறது
பூவைப் போலக் கசங்கி . . .

மிக இதமான பொழுதுகள்
மனதை வருடுகின்றன
உன் நினைவுகள்போல
மனதைத் திறந்து
முழுதாய் வெளிப்பட்ட பின்னும்
இலையுதிர்ந்த
மரமாகுவது தொலைவில் உனக்கும்
மிக அருகில்
எனக்கும்
கனத்துப் பெருகுகிறது.
கரையடர்ந்த
தென்னைகளுடன்
தனித்துவிட்டதாய் விடும்
நெடும் மூச்சுகள்
என் காற்றிலும்
கலக்கத் தவறுவதில்லை.
மிகச் சாதாரணமாகிப்போகிறது
இந்தக் கவிதை
நம் அருகாமைபோல.

No comments: