Saturday, March 12, 2011

கவிதைகள் அனார்

இரண்டு பெண்கள்

முழு அர்த்தத்தில்
நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக்கொண்டிருந்தோம்
கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகியிருந்தோம்

நம்மைத் தொந்தரவு செய்யாமல்
மூன்று இரவுப் பறவைகள்
ஒன்றையன்று தொடர்ந்து செல்கின்றன
காற்றை உடைத்து
அளவுக்கு மீறிய அகண்ட சிறகுகளினால் அலையெழுப்பி
உடைந்த காற்றுத் துண்டங்கள்
கண்ணாடியில் பட்டுச் சிதறுகின்றன

தொலையில்
ஏதோ தவிப்புடன் துடித்துக்கொண்டிருந்த ஒற்றை வெள்ளி
அடுத்த வீட்டு நிழல் மூக்குக் கூரைமுகட்டில்
மூக்குத்தியென ஜொலிப்பதைப் பார்த்திருந்தோம்

உனது கூடு நிரம்பித் தேன் வழிந்துகொண்டிருந்த
மாயப்பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி
நீ ஏக்கமுற்ற பொழுது
மற்றுமொரு பறவை பறந்து செல்கிறது

நான் திகட்டும்வரை உணவூட்டியதில்
நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்

ஒவ்வொரு ஓலை மடிப்பிலும்
தன்னை ஒழுகவிட்டிருக்கும்
விசுவாசமான தூய்மையான அதன் ஒளியைப் பூசுகின்றேன்
விரல்களில் விசித்திரமாய் நீ பார்க்கும்
அவ்வொளிச் சாறு
அதிசயமான பானமாகிவிடுகின்றது

நாம் முடிவற்றுப் பருகப் பருக
தாகங்கொண்டு இரண்டு பெண்களை அருந்தும் இவ்விரவு
இதற்குமேல் இல்லையென்ற
அற்புதத்தைச் சுவைத்துவிட்ட திளைப்பில்
சாய்ந்து செல்கின்றது

அந்தமற்ற கண்ணாடி வானம்
நானுமாகி நீயுமாகிக் கிடந்தோம்

No comments: