Saturday, March 12, 2011

கவிதைகள் ரமேஷ்பிரேதன்

நீரின் தனிமை

நிறமற்ற மழை
மண்ணின் நிறம் உடுத்தி ஓடுகிறது
நதியின் தடத்தில் பேயோட்டம்
வேரோடு சாய்ந்த பிருமாண்ட ஆலமரம்
கூந்தல் அலைய மிதந்துபோகிறது
தன்னைத் தடுக்கும் பாலத்தை
மோதி உடைக்கிறது

நிறமற்ற மழை
என்மீது பொழிகிறது
உடம்பு சில்லுச் சில்லுகளாகப் பொலிந்து
கரைந்து மாமிசமாய் ஓடுகிறது
பேயோட்டத்தில் எனது அலறல்
கூக்குரல் கும்மாளப் பேய்க்குரல்
ஊரையே மோதி உடைக்கிறது

காடுகள் மூழ்கிவிட்டன
மலைகளின் உச்சிகள் மட்டுமே தெரிகின்றன
அனைத்து உயிர்களும் செத்திருக்கலாம்
பிழைத்திருப்பது நீரும் நானும்
நானுமாகிய நீர் மட்டுமே
பயமாக இருக்கிறது
யாருமற்ற உலகில்
வெறும் நீராக மட்டும்
மீந்து நிற்பதற்கு.

n

நடை

நீண்ட தூரம் நடந்தேன்
நெடுங்காலம் கடந்தேன்
ஏதோவொரு தருணத்தில்தான் உறைத்தது
என்னுடன் வேறு யாருமே இல்லை

பயம் பற்றிக்கொண்டது
நான் தனிமையில் எரிந்தேன்
பற்று அறுந்த தருணம்
பற்றிப் படர்ந்தது சூன்யம்

எனது நடை நின்றது
குளத்தில் நிலா தெரிந்தது
கைமுழ விறால் மீன்
அதற்குள் நுழைந்தது
நிலா கலங்கிக் கலைந்து மீண்டும்
ஒருமுகம் கொண்டது

நீண்ட தூரம் நடந்த களைப்பு
நடுநிசிப் பசி
குளத்துக்குள் இறங்கி
இருகை அள்ளி அருந்தினேன்
முதல் மிடறில் நிலாவும்
அடுத்த மிடறில் விறாலும்
முறையே என் மண்டைக்குள்ளும்
வயிற்றுக்குள்ளும் நீந்தத் தொடங்கின
மீண்டும் என் நடையைத் தொடர்ந்தேன்
இன்றைய விடியல்வரை.

n

மூவர்

நேற்றிரவு நான்
மூன்று கொலைகளைச் செய்தேன்
பலத்த மழை
யாருமற்ற நெடும்பாதை
இருசக்கர வாகனத்தில் நான்
என்னை உரசியபடி வேகமாகக் கடந்த
யாரோ ஒருவனை
அசிங்கமாகத் திட்டிச் சபித்தேன்
வேகம் குறைத்து என்னைத் திரும்பிப் பார்த்து
முறைத்தவனை
எதிரில் வந்த லாரி மோதியது
பரிதாபமாகச் செத்தான்

மழை மீண்டும் வலுத்ததால்
மூடியிருந்த கடையோரமாக ஒதுங்கினேன்
பெரும் போதையில் ஒருவன்
நனைந்தபடி தூங்கிக்கொண்டிருந்தான்
அவனைப் பார்க்க வெறுப்பாக இருந்தது
நடுச்சாலையில் மூடி திறந்திருந்த
பாதாளச் சாக்கடைக்குள் மழைநீர்
குபுகுபுவெனக் கொட்டிக்கொண்டிருக்க
அவனைக் கால்களைப் பற்றி இழுத்துச் சென்று
குழிக்குள் போட்டு மூடிவிட்டேன்

வீட்டுக்கு வந்தேன்
யாருமே இல்லை
நான் மட்டும் தனியாக இருக்க
பயமாக இருந்தது
தூக்குப்போட்டுக்கொண்டேன்.

No comments: