Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள்- எம். நவாஸ் சௌபி

மழையின் நிழலில் வசித்தல்

மழையின் மெல்லிய குரலாக
ஜன்னலில் விழுகிறது தூவானம்
நீ சிதறி அறைச் சுவரில் தெறிக்கிறாய்
எனது நிலத்தில் நீயாகிய ஈரம்
பாதம் புதையும் மழையில்
உன் காலடியைத் தடம்பார்த்து
மிதியாமல் நானும் திரும்பாமல் நீயுமாய்
நாம் நடந்த தெருவின் வளைவில்
வாலாட்டிக்கொண்டிருந்த நாய்
நன்றியின் குறியீடாய்
நின்றிருக்க வேண்டும்.
பெருத்த மழை மெல்ல மெல்ல முடிந்து
அதன் கடைசித் துளியும்
செடியின் இடையில் தேங்கியிருந்து
விழுவதுபோல்
தொலைவில் இன்னும் தொலைவில்
நீ சென்றுகொண்டிருக்கிறாய்
நன்றி உன்னைப் பின்தொடர்கிறது. . .
தலைக்கு மேலே
மழையில் நனைந்த காகம்
சிறகை விரித்து அடித்து
ஈரத்தை உதறிவிட்டுப் பறக்கிறது.
நான் நனைந்த ஈரத்துடன்
நீயாகிய நீராகி நடக்கிறேன்.

அவள் சற்றுத் தள்ளி உறங்கிய இரவு

நள்ளிரவு
உறக்கத்தை ஒரு எலி கொறித்துக்கொண்டிருக்கிறது.
கடிகாரம் சுவாசிக்கும் ஓசை
மிகுந்த அச்சமாய்
அறையில் பரவும் மெல்லிய வெளிச்சத்தை விழுங்குகிறது
நான் நம்பிக்கை இழக்கிறேன்
இன்றிரவு
அவள் சற்றுத் தள்ளி உறங்குகிறாள்.
மூச்சையாகிக் கிடக்கிறது படுக்கை
பெரும் வெளியாய்
இரவு நீண்டுகொண்டு செல்லும் பாதை வழியே
விழியின் கால்கள் நகர
உறக்கம்
அவளது காலடியில் ஒரு பூவாய் உதிரும்.
அவள் சற்றுத் தள்ளி உறங்கிய இரவு
இன்னும் விடியவே இல்லை.

No comments: